‘‘ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது சில அமைச்சர்கள் மற்றும் கட்சியினரின் செயல்பாடுகளால் தன்னால் நிம்மதியாக தூங்கக்கூட முடியவில்லை” என பொதுக்குழு கூட்டத்திலேயே பொங்கி வெடித்தார் சூரியக் கட்சி தலைவர். இப்போது அதைவிட மோசமான அட்மாஸ்பியரில் இருக்கிறாராம் வாகைக் கட்சி தலைவர். அந்தளவுக்கு வாகைத் தம்பிகள் அவரின் நிம்மதியைப் பறித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
வெளியில் தெரிந்த விஷயங்கள் இவ்வளவு என்றால் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் பல தகவல்களும் அவரது காதுக்கு வருகிறதாம். அதில் சில தகவல்கள் லேட்டாகவே அவரது பார்வைக்குப் போகிறதாம்.
இதுகுறித்து தனக்கு நெருக்கமான வட்டத்தினருடன் அண்மையில் ஆலோசனை நடத்திய வாகைத் தலைவர், அரசாங்க உளவாளிகள் தரும் தகவல்களை செக் பண்ணும் விதமாகவும் அவர்களால் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் மறைக்கப்படும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் விதமாகவும் தனியார் ஏஜென்சி மூலமாக கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்கும் முடிவுக்கு வந்திருக்கிறாராம்.
இந்தக் குழு மூலமாக கட்சி நிர்வாகிகள் தொடங்கி மாண்புமிகு மக்கள் வரைக்கும் மட்டுமல்லாது அப்படியும் இப்படியுமாய் இருக்கும் அதிகாரிகளையும் கண்காணித்து கடிவாளம் போடப் போகிறாராம்.