‘ஜெயில்’ மாநகர வணக்கத்துக்குரியவர் காட்டும் ‘அவசரம்’ |உள்குத்து உளவாளி

‘ஜெயில்’ மாநகர வணக்கத்துக்குரியவர் காட்டும்  ‘அவசரம்’ |உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

‘ஜெயில்’ மாநகரில் வணக்கத்துக்குரிய பதவியில் அமர்ந்திருக்கும் சீனியர் நடிகையின் பெயர் கொண்ட சூரியக் கட்சி அம்மணி, இன்னும் 3 மாதங்களே அதிகார பலம் இருப்பதால் அதற்குள்ளாக ‘முடிக்க வேண்டிய’ வேலைகளை எல்லாம் முடிக்க அவசரம் காட்டுகிறாராம். இதற்காக எந்த சமரசத்துக்கும் தயாராய் இருக்கும் அவர், தான் இழுத்த இழுவைக்கு வரவில்லை என்பதற்காக முந்தைய ஆணையரை 3 மாதங்களுக்கு முன்பு தூக்கி அடித்தாராம்.

தொகுதியின் விசில் கட்சியின் ‘வினோதமான’ எம்எல்ஏ-வைப் பிடித்துத்தான் அந்தக் காரியத்தை முடித்தாராம். இந்த நிலையில், முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை இப்போது அங்கே ஆணையராகப் போட்டிருக்கிறார்களாம்.

ஆனால், முன்னவரே பரவாயில்லை என்று சொல்லுமளவுக்கு ஐஏஎஸ் அந்த அம்மணியை எகிடுதகிடாய் டீல் பண்ணுகிறாராம். மாநகரின் முக்கிய பகுதிகளில் போடப்பட்டுள்ள சில லேஅவுட்களுக்கு அப்ரூவல் தருவது தொடர்பாக முன்கூட்டியே ‘அனைத்தையும்’ பேசிமுடித்துவிட்டாராம் அம்மணி. அதேபோல் பாதாளச் சாக்கடை டெண்டர் உள்ளிட்ட சில பல வேலைகளிலும் சட்டுப்புட்டுன்னு ‘காரியத்தை’ முடிக்க வேண்டி இருக்கிறதாம். ஆனால், 2 மாத காலமாக கூட்டமே நடக்காமல் இருப்பதால் இதையெல்லாம் அம்மணியால் திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லையாம்.

இதற்கு நடுவே, அம்மணியிடம் தங்களது காரியங்களை முடிக்க ‘கணக்கு வழக்கு’ பேசியவர்கள் எல்லாம், “என்னாச்சு மேடம்?” என்று நச்சரிக்கிறார்களாம். நச்சரிப்புகள் தாங்கமுடியாமல், “சீக்கிரமா கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு பண்ணுங்க சார். அடுத்த கூட்டத்துல இந்த சப்ஜெக்ட்டை எல்லாம் சேத்துருங்க சார்” என்று ஐஏஎஸ் ஆணையரை அவசரப்‘படுத்தி’ வருகிறாராம் அம்மணி. ஆனால், உள் விவகாரங்களை அறிந்த ஆணையரோ, “ஆகட்டும் பார்க்கலாம்” என்று சொல்லியே இழுத்து வருகிறாராம்.

‘ஜெயில்’ மாநகர வணக்கத்துக்குரியவர் காட்டும்  ‘அவசரம்’ |உள்குத்து உளவாளி
புதல்வரை வைத்து புதுக்கணக்கு போடும் ‘மலர்ச்சி’ தலைவர் | உள்குத்து உளவாளி

X