‘குறுஞ்செய்தி’ விவகாரம் ஆளும் கட்சிக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வரும் நிலையில், விட்டோமா பார் என சூரியக் கட்சி தலைகள் இந்த விவகாரத்தில் தினம் ஒரு அறிக்கை விட்டு ஆளும் கட்சியை அலறடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த சூரியக் கட்சியின் ‘கார்த்திகை’ எம்எல்ஏ மீது மகளிர் திட்ட அதிகாரி ஒருவர் அளித்த பழைய புகாரை இப்போது தூசு தட்டி எடுத்து சுற்றலில் விட்டிருக்கிறதாம் ஆளும் கட்சி வாரியர் படை.
காலை உணவு திட்ட பணியாளர் பணிக்காக ஒருவரை சிபாரிசு செய்திருந்தாராம் ‘கார்த்திகை’ எம்எல்ஏ. ஆனால், அவருக்குப் பதிலாக இன்னொருவரை அந்த இடத்தில் பணியமர்த்திவிட்டார்களாம். இதனால் டென்ஷனான எம்எல்ஏ, சம்பந்தப்பட்ட மகளிர் திட்ட அதிகாரியை அழைத்து, சத்தம் போட்டாராம். ”எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை முழுக்க முழுக்க இது பிடிஓ சம்பந்தப்பட்ட விஷயம்” என திட்ட அதிகாரி சொல்லியும் திட்டுவதை நிறுத்தாத ‘கார்த்திகை’ எம்எல்ஏ, கொஞ்சம் ‘கூடுதலாகவே’ பேசிவிட்டாரம்.
போதாதுக்கு, சீறும் கட்சியின் முருகஸ்தலத்தின் பெயர் கொண்ட மாவட்டப் பெண்மணியும் ’கார்த்திகை’ எம்எல்ஏ-வுக்காக வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்துக்கு வந்தாராம். இவர் சமூக வலைதளத்தில் தனக்கு எதிராகப் பதிவிட்ட விமர்சனங்களால் கொதிப்படைந்த திட்ட அதிகாரி, இதுகுறித்து மாவட்ட சைபர் க்ரைமில் பக்காவாய் புகார் கொடுத்துவிட்டாராம். அந்தப் புகாரில், ‘கார்த்திகை’ எம்எல்ஏ தன்னை சாதியை இழுத்துப் பேசியதாகவும் திட்ட அதிகாரி தெரிவித்திருந்தாராம். இது தொடர்பாக ஆட்சியரிடமும் வாய்மொழியாகச் சொல்லி வருத்தப்பட்டாராம்.
கடந்த அக்டோபர் மாதம் அளிக்கப்பட்ட இந்தப் புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தற்போது இந்தப் புகாரை எடுத்து சமூகவலைதளத்தில் சுற்றவிட்டு சூரியக் கட்சியின் ’கார்த்திகை’ எம்எல்ஏ-வுக்கு நெருக்கடியை உண்டாக்கி வருகிறதாம் ஆளும் கட்சி முகாம். இதற்கு நடுவே, இப்போது அந்த திட்ட அதிகாரிக்கு இடமாறுதல் உத்தரவு வந்துவிட்டதால், ‘ஆளை விடுங்கப்பா சாமி’ என்று சொல்லி அங்கிருந்து மூட்டையைக் கட்டிவிட்டாராம்.