‘துறை’ தொகுதி அரசியல் நிலவரம் | உள்குத்து உளவாளி

‘துறை’ தொகுதி அரசியல் நிலவரம் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

தேர்தல் திருவிழாவை எதிர்பார்த்து நிற்கும் ‘துறை’ தொகுதியில் பதவியை ராஜினாமா செய்த ஜெயமானவருக்கு அவரை எதிர்த்து அந்தத் தொகுதியில் போட்டியிட்ட விசில் வேட்பாளரும் சூரியன் வேட்பாளரும் வாக்குக் கேட்பார்கள் என்று வாய்கிடக்க முடியாமல் ‘கோட்டையன்’ தலைவர் போகிற போக்கில் போட்டுவிட்டுப் போய்விட்டார்.

இதை வைத்து இப்போது ஆளாளுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஜெயமானவரை ஜெயிக்க வைத்தால் இந்தத் தொகுதியில் தங்களுக்கான எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று கணக்குப் போடுகிறதாம் ஒரிஜினல் வாகை வட்டாரம்.

அதேசமயம், ‘கோட்டையன்’ தலைவர் கோடிட்டுக் காட்டிய சூரியன் கட்சியின் ‘கார்டன்’ வேட்பாளர் இப்போது எந்தக் கட்சியிலும் இல்லாமல் ஐடியலாக இருக்கிறார். இவரை எப்படியும் இழுத்துவிடலாம் என்று ‘கோட்டையன்’ தலைவர் ஒரு கணக்குப் போடுகிறாராம். ஆனால், ‘கார்டன்’ தலைவருக்கு வாகையை விட இலையே மேலாகத் தெரிகிறதாம். அதனால் மீண்டும் தாய்க்கழகத்துக்கே திரும்பிவிடுவதே சேஃப் என அவர் நினைக்கிறாராம். அப்படி அவர் திரும்பினால் அவருக்கே இலைத் தலைமை சீட்டும் கொடுக்கும்.

கட்சி ஆரம்பித்ததில் இருந்து இரண்டு தேர்தல்களைத் தவிர மற்ற எல்லா தேர்தல்களிலும் இலையே இங்கு வென்றிருக்கிறது. அந்தளவுக்கு எம்ஜிஆர் பக்தர்கள் நிரம்பிய தொகுதி இது என்பதால் இங்கு நின்றால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என கணக்குப் போடுகிறாராம் திருவாளர் ‘கார்டன்’.

இங்கே இப்படி இருக்க, சூரியக் கட்சியில் ரூட் க்ளியராக இருப்பதால் மஞ்சள் மாநகர் கிழக்கில் தோற்றுப் போன ‘முத்தான’ கடவுளுக்கு, மாண்புமிகு மிதப்பில் இருந்துவிட்டு தற்போது பட்டம் பதவி இல்லாமல் எதுவும் சரிப்பட்டு வரவில்லையாம். அதனால், இடைத்தேர்தலில் இறங்கிப் பார்க்கலாமே என்ற ஆசை அவருக்கு வந்திருக்கிறதாம்.

இலையும் வாகையும் போட்டிபோட்டுக் கொண்டு வாக்குகளைப் பிரித்தால் இடையில் புகுந்து வந்துவிடலாம் என்று கணக்குப் போடுகிறாராம் ‘முத்தான’ கடவுள். தனது விருப்பத்தை தலைமையிடத்தும் அரசல் புரசலாய் சொல்லியும் வைத்திருக்கிறாராம். பணம் - காசு செலவுக்கு பஞ்சமிருக்காது என்பதால் தலைமை இவரையே ‘துறை’ தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் மஞ்சள் மாவட்ட உடன்பிறப்புகள்.

‘துறை’ தொகுதி அரசியல் நிலவரம் | உள்குத்து உளவாளி
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

X