மறைந்திருக்கும் ‘வளத் துறையில்’ நாளொரு மேனியும் பொழுதொரு டிரான்ஸ்ஃபருமாக அதிகாரிகளை இடம் மாற்றிக் கொண்டே இருக்கிறார்களாம். வளம் கொழிக்கும் துறை என்பதால் ஊழல் செய்யும் அதிகாரிகளைத்தான் பந்தாடுகிறார்கள் என பார்த்தால், அப்படியும் இல்லையாம்.
ஓரளவுக்கு கைசுத்தம் வாய் சுத்தமாக இருக்கும் அதிகாரிகளைத்தான் அங்கும் இங்குமாய் அநியாயத்துக்குப் பந்தாடுகிறார்களாம். வாகை ஆட்சி மலர்ந்த பிறகு இதுவரை அப்படி முப்பதுக்கும் மேற்பட்ட முக்கிய அதிகாரிகளை இஷ்டம் போல் தூக்கி அடித்திருக்கிறார்களாம். இதில் சுமார் 15 அதிகாரிகள் இரண்டு மூன்று முறை கூட பந்தாடப்பட்டிருக் கிறார்களாம்.
அதிகபட்சமாக ஒரு அதிகாரி கடந்த 3 மாதங்களில் 3 முறை பெட்டி தூக்கி இருக்கிறாராம். அந்தளவுக்கு மாதத்துக்கு ஒரு டிரான்ஸ்ஃபரை எதிர்கொண்டிருக்கும் அவர் அடுத்த டிரான்ஸ்ஃபரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம். இப்படி நடக்கும் டிரான்ஸ்ஃபர்களில் பலதும் துறை சம்பந்தப்பட்ட மாண்புமிகுவின் கவனத்துக்கே போவதில்லையாம்.
முதன்மையானவருக்கு நெருக்கமான அண்டை தேசத்து அண்ணன் - தம்பிகளின் வாய்மொழி உத்தரவு என்பதால் துறையின் முதன்மை அதிகாரியும் மறுப்பேதும் பேசமுடியாமல் ‘மாறுதல்’ கோப்புகளில் கையெழுத்துப் போட்டு அனுப்புகிறாராம். இந்த சமாச்சாரங்களில் எல்லாம் தனக்கு சம்பந்தமில்லை என்றாலும் “கொஞ்சம் அப்படி இப்படி இருக்கறவங்கள எல்லாம் களையெடுத்துட்டு வர்றோம்” என்று கெத்தை விட்டுக்கொடுக்காமல் சொல்லி வருகிறாராம் துறைக்கு தலைமை தாங்கும் மூன்றெழுத்து மாண்புமிகு.