இலைக் கட்சியில் இருந்து விசில் பார்ட்டிக்கு கூடுவிட்டு கூடு பாய்ந்த ‘ஃபோர்ட்’ மாவட்டத்தின் ‘விஜயமானவர்’ தனது ‘மவுன்ட்’ தொகுதியில் மீண்டும் களமிறங்க அனைத்து வேலைகளையும் அற்புதமாய் பார்த்து வைத்துவிட்டாராம். தொகுதி முழுக்க விசில் சின்னங்களை வரைந்து வைத்துவிட்டார்கள்.
அண்ணனின் பெயர் மட்டும்தான் எழுத வேண்டியது பாக்கி. எந்தக் கட்சியில் இருந்தாலும் இலைக் கட்சி ஓட்டுகள் தனக்கே விழும் என்கிற அளவுக்கு இமேஜை உருவாக்கி வைத்திருக்கும் விஜயமானவர், சூரியக் கட்சிக்குள்ளும் ஊடாடி வைத்திருக்கிறாராம்.
அதனால்தான் இரண்டு தேர்தல்களில் தன்னை எதிர்த்து நின்ற சூரியக் கட்சியின் கந்தக் கடவுள் பெயர் கொண்ட வலுவான வேட்பாளரை ‘தந்திரமாக’ தோற்கடிக்க முடிந்ததாம். 2026 பொதுத் தேர்தலில் இதுகுறித்து ஆய்வு நடத்திய சூரியக் கட்சித் தலைமை, கந்தக் கடவுளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு ‘செல்லமான’ மாவட்டச் செயலாளரையே விஜயமானவரை எதிர்த்து நிறுத்தியது.
ஆனால், நிலைமை இன்னும் மோசமாகிப் போய் சூரியன் மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டது. அதனால், இடைத்தேர்தலில் மீண்டும் கந்தக் கடவுளையே களத்தில் இறக்க திட்டமிடுகிறதாம் சூரியக் கட்சி.
இந்நிலையில், ஏதோ சந்தேகப்பட்டு ’மவுன்ட்’ தொகுதியில் ஒன்றியப் புள்ளிகள் இருவரை அண்மையில் பதவியை விட்டு தூக்கி இருக்கிறது அந்தக் கட்சி. இதற்கு நடுவே, விசில் பார்ட்டிக்குள் விஜயமானவர் வீரியமாக வளர்வதை அக்மார்க் விசில் பார்ட்டியின் மாண்புமிகுவானவர் அவ்வளவாய் விரும்பவில்லையாம். பொது நிகழ்ச்சிகளில், “முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட...” என்று விஜயமானவரின் பெயரைக் கூட உச்சரிக்காமல் கடந்துவிடுகிறாராம் விசில் மாண்புமிகு.
ஆனால், அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர் போல், “மாப்ள... மச்சான்” என்று காரியமே கண்ணாய் இருக்கிறாராம் விஜயமானவர். அதேசமயம், எத்தனை பேர் தலைகீழாய் நின்றாலும் அண்ணனோட வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
இந்தத் தொகுதிக்கு விசில் தலைவரே பிரச்சாரத்துக்கு வராட்டிப் போனாலும் ஜெயிக்கப் போறது அண்ணன்தான். ஜெயிக்கிறது மட்டுமல்ல, பழையபடி மாண்புமிகு சீட்டையும் பிடிக்கத்தான் போறாரு. அப்புறம் பாருங்க என்ன நடக்குன்னு” என்று அர்த்தப் புன்னகை பூக்கிறார்கள் விஜயமானவருக்கு விசுவாசமான புள்ளிகள்.