அண்மையில் துறை சார்ந்த ஆய்வுப் பணிக்காக பாண்டிநாட்டு தலைநகருக்குப் புறப்பட்டாராம் ஒரு மாண்புமிகு. கணக்கு வழக்கிற்கு பேர் போனவர் வருகிறார் என்றதும் துறை சார்ந்த அதிகாரிகள் அனைத்தையும் தூசு தட்டி பக்காவாய் எடுத்து வைத்திருந்தார்களாம்.
ஆனால், அந்த மாண்புமிகுவோ நேராக ஆய்வுக்குப் போகாமல் பக்கத்தில் இருக்கும் மாவட்டத்துக்கு தரிசனத்துக்குப் போய் விட்டாராம். பின்னர், சாவகாசமாக பாண்டி நாட்டு தலைநகருக்கு வந்தவர், அப்படியும் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு வராமல் சொகுசு ஓட்டலில் தங்கியபடி, கோப்புகளை எடுத்துவரச் சொல்லி ‘சில பல’ ஆய்வுகளை மேற்கொண்டதாகச் சொல்கிறார்கள்.
தன்னைச் சந்திக்க வந்த புள்ளிகளிடம் நேரத்தை வீணடிக்காமல் நெளிவு சுளிவுகளோடு அழகாய்ப் பேசிக் காரியத்தைக் கச்சிதமாய் முடித்திருக்கிறார் மாண்புமிகு.
ஒரு கட்டத்தில் புள்ளிகள் தயங்கியபடி இழுக்க.. “என்ன இவ்ளோ யோசிக்கிறீங்க... போன ஆட்சியில தாராளமா செஞ்சீங்க.. இப்ப நாங்களே இவ்ளோ இறங்கி வந்துருக்கோம்” என்று சொல்லிச் சிரித்தாராம். புள்ளிகளும் வாயடைத்துப் போய், ‘வந்தவரைக்கும் லாபம்’ என்று நினைத்தபடி கைகுலுக்கி விடை பெற்றிருக்கிறார்கள். மாண்புமிகுவின் உதவிக் கைகள் மிச்ச வேலைகளை முடித்துக் கொண்டு ரயிலேறியதாகத் தகவல்.