தமிழகம்

‘அவார்டு நகர்’ மாவட்ட விசில் கட்சி சம்பவங்கள் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘அவார்டு நகர்’ மாவட்ட இலைக் கட்சி முன்னாள் எம்எல்ஏ-வான ‘வர்மக்கலை’ புள்ளியானவர் இலைக் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்காக மறுகினார். ஆனால், ஒரு காலத்தில் தனக்கு பினாமி கணக்காய் இருந்த வர்மத்தை இதற்கு மேல் வளரவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார் திருப்பதி கடவுள் பெயர் கொண்ட இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகு.

அதனால், ராஜாவான இன்னொரு முன்னாள் எம்எல்ஏ-வையும் துணை மாப்பிள்ளையாய் கூட்டிக் கொண்டு போய் அண்மையில் பனையூர் பார்ட்டியில் செட்டிலானார். ஆனால், அழையா விருந்தாளியாக இவர்கள் உள்ளே வந்ததை மாவட்டத்தில் உள்ள விசில் தம்பிகள் அவ்வளவாய் ரசிக்கவில்லை.

இதனால் வர்மக்கலைப் புள்ளி விசில் அரசின் 100 நாள் சாதனை விழாவை தனது ஆதரவாளர்களைத் திரட்டி பொதுக்கூட்டமாக நடத்தினார்.

இந்த நிலையில், தனது சகோதரர் மகன் திருமணத்தை, பழைய பந்தத்தில் ஃபோர்ட் மாண்புமிகுவை அழைத்து வந்து நடத்தி பிரமாதப்படுத்தினார் வர்மம். கூடவே, ராதையின் நாயகனான முன்னாள் இலைக் கட்சி எம்.பி.-யின் மனைவி மற்றும் மகளை விசில் கட்சியில் சேர்த்து காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டார்.

இப்படியாக, இலை, குக்கர் கட்சியைச் சேர்ந்தவர்களை எல்லாம் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து விசில் பார்ட்டியில் கோத்துவிட்டு, தனக்கான கட்சிப் பதவியை வாங்கிவிட வேண்டும் என நினைக்கிறாராம் திருவாளர் வர்மம். ஆனால், எக்காரணம் கொண்டும் இவரை உள்ளே விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மாவட்டத்தின் இரண்டு மாண்புமிகுக்களும், கட்சி நிகழ்ச்சிகளிலோ அழைப்பிதழ்களிலோ வர்மக்கலை புள்ளிக்கோ அவரது விசுவாசிகளுக்கோ எந்த முக்கியத்துவமும் கொடுக்க வேண்டாம் என்று சொந்தக் கட்சியினருக்கு வாய்மொழி உத்தரவு போட்டு வைத்திருக்கிறார்களாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT