தமிழகம்

புது உற்சாகத்தில் கொங்கு மண்டலத்தின் மிஸ்டர் ‘ஷாக்’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முன்னாள் ‘ஷாக்’ மாண்புமிகுவானவர் தாங்க முடியாத உற்சாகத்தில் இருக்கிறாராம். காரணம், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். ஆலயக் கட்சிக்கு தாவலாம்... பனையூர் பக்கம் பாயலாம் என்றெல்லாம் பேசப்பட்டு வரும் ‘ஷாக்’ புள்ளி தான் டெல்லியில் எடக்கானவருக்கு தேவையான உதவிகளை இதுவரை செய்து வந்தாராம்.

உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திட்ட காலத்திலிருந்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ‘ஃப்யூஸும் கேரியரும்’ போல பிரிக்க முடியாக நெருக்கத்தில் இருக்கிறாராம் மிஸ்டர் ‘ஷாக்’.

இந்த நெருக்கத்தை வைத்து டெல்லியில் எடக்கானவருக்கு சில பல சகாயங்களை சத்தமில்லாமல் சாதித்துக் கொடுத்திருக்கிறாராம். அதனால் தான் அவரைப் பற்றிய வதந்திகளும் செய்திகளும் வாரத்துக்கு ஒன்றாய் பறந்தாலும் அதைக் கண்டும் காணாமல் இருக்கிறாராம் எடக்கானவர்.

இந்த நிலையில், பாஜக-வின் தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருப்பதால் எக்ஸ்ட்ரா சார்ஜ் ஏற்றியது போல் புது உற்சாகத்தில் இருக்கிறாராம் மிஸ்டர் ‘ஷாக்’.

இதைவைத்து, “இனி மேல் கட்சிக்குள் மிஸ்டர் ‘ஷாக்’கின் கை பழையபடி ஓங்கிவிடும். அவர் வேறு கட்சிக்கு போவதாக முடிவெடுத்திருந்தால் கூட கொஞ்ச நாளைக்கு அதை நினைக்கமாட்டார்” என்று உத்தரவாதம் கொடுக்கிறார்கள் அவரது கடந்த கால அரசியலைப் படித்தவர்கள்.

SCROLL FOR NEXT