

இம்முறை எங்களுக்கு இரட்டை இலக்கத்தில் சீட் வேண்டும் என அவ்வப்போது அடக்கமாக ‘சீறிக்’ கொண்டே இருக்கும் அந்தக் கட்சியில் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் இருவருக்கு இம்முறை சீட் இருக்காது என்கிறார்கள். இதில், தனது பெயருடன் ஊர் பெயரையும் சேர்த்து வைத்துள்ள அந்த எம்எல்ஏ-வின் பொறுப்பில் தான் கட்சியின் ‘ப்ரைட்’ சேனல் இருக்கிறதாம்.
கடந்த முறை சீட் கொடுக்கும் போதே சேனலின் நிர்வாக கணக்கு வழக்குகளை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று சொன்னார்களாம். ஆனாலும் இன்னமும் எம்எல்ஏ பெயரில் தான் சேனல் ஓடுகிறதாம்.
இந்த நிலையில், கட்சியின் ‘துணைப்’ பொறுப்பில் இருக்கும் பெண்மணி ஒருவருக்கு இம்முறை ‘சேனல்’ எம்எல்ஏ-வின் ‘ஊர்’ தொகுதியை கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம் தலைவர். அப்படிக் கொடுத்தால் ‘சேனல்’ காரர் ஏதாவது ஏடாகூடம் செய்யலாம் என்றும் பேச்சு ஓடுகிறது.
அதேபோல், கடந்த முறை ‘பட்டின’ மாவட்டத்தில் சீட் வாங்கி வெற்றிபெற்ற சிறுபான்மை சமூக எம்எல்ஏ-வுக்கு போட்டியாக அதே வகுப்பைச் சேர்ந்த ‘அப்துல்’ தலைவர் சென்னைக்குள் ஒரு சீட் கேட்கிறாராம்.
அதனால் இம்முறை ‘பட்டின’ எம்எல்ஏ-வுக்கும் சீட் கிடைப்பதிலும் சிக்கல் என்கிறார்கள். கடந்த முறையே இவருக்கு சீட் கிடைக்குமா கிடைக்காதா என்ற சந்தேகம் இருந்தபோது, “அங்கே இல்லை என்றால் நாங்கள் தருகிறோம் உங்களுக்கு” என சூரியக் கட்சி தரப்பில் அழைத்த அனுபவமும் இருப்பதால் இவர் விஷயத்தில் தலைவர் எச்சரிக்கையாகத்தான் இருப்பார் என்கிறார்கள்.