இலைக் கட்சியில் இருந்து இன்னும் 15 எம்எல்ஏ-க்கள் எங்கள் பக்கம் ஜருகண்டி ஆவார்கள் என்று ’கோட்டை’ தலைவர் ட்ரைலர் போட்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் முடிவுகளால் இலைப் பார்ட்டி தலைவர் இடிந்து போயிருக்கிறாராம்.
தேர்தல் முடிவுகளை வைத்து இலைக் கட்சியின் புரட்சி எம்எல்ஏ-க்கள் தனியாக ஆலோசனைக் கூட்டங்களை ஆர்வத்துடன் நடத்தி வருகிறார்கள். பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்டத்துக்கு போகவேண்டும் என்பதே அவர்களின் விவாதமாக இருக்கிறதாம்.
இந்த நிலையில், பிரச்சினை அந்த அளவுக்குப் போகாமல் தடுக்கும் நோக்கில், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் கேட்டது போல் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியைத் தந்துவிடுவதாக இலைக் கட்சி தலைவர் சைடிலிருந்து தூது அனுப்பப்பட்டதாம்.
இதுகுறித்து, இலைக் கட்சியின் ‘மொழிக் கடவுள்’ எம்எல்ஏ-வுடன் இலைத் தலைவரின் நிழலான மாங்கனி மாநகரத்து ‘சிலம்பு ஆசிரியர்’ நைச்சியமாகப் பேசிப் பார்த்தாராம். அதற்கு அவர், “பிரச்சினை கைமீறிப் போய்விட்டதே... இப்போது வந்து இதைச் சொல்கிறீர்களே” என்று திருப்பிக் கேட்டாராம். இருப்பினும் சமாதானத் தூதை வேறு சேனல்கள் மூலம் தொடர்கிறதாம் இலைத் தலைவர் முகாம்.
புரட்சி எம்எல்ஏ-க்கள் தரப்பிலோ, இன்னும் கணிசமான எம்எல்ஏ-க்களை தங்கள் பக்கம் ஈர்த்து தாங்கள் தான் உண்மையான இலைக் கட்சி என்று பிரகடனம் செய்வது. அப்படியே விசில் ஆட்சிக்கு அனுசரணையாகச் செயல்பட்டு ‘ஆகவேண்டியதை’ பார்த்துக் கொள்வது என்ற மோடில் காய்நகர்த்த ஆரம்பித்திருக் கிறார்களாம்.
இதனிடையே, இந்த “ஸ்பிலிட்’ விவகாரத்தில் கொங்கு ‘பெல்’லாரை வைத்து தாமரைத் தலைமை செஸ் ஆடுகிறது என்ற செய்தியும் கசிகிறது. அதற்கு செக் வைக்கும் விதமாகவுமே அண்மையில் தலைநகர் வந்த டெல்லி தலைவரை நேரில் சந்தித்து கைகுலுக்கினாராம் இலைத் தலைவர்.