தமிழகம்

விசில் அமைச்சர் - வாரிசு எம்.பி ஈகோ யுத்தம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மருது சீமை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளும் இப்போது விசில் பார்ட்டி வசம். சூரியக் கட்சி ஆட்சியின்போது, ’குடி’ தொகுதி மட்டும் கதர் பார்ட்டி வசம் இருந்தது. இப்போது அந்த மாவட்டத்தின் எம்பி பதவி மட்டுமே கதர் வசம் இருக்கிறது. அங்கு பொறுப்பில் இருக்கும் வாரிசு எம்பி-க்கும் வளத்துறையை கையில் வைத்திருக்கும் மூன்றெழுத்து விசில் அமைச்சருக்கும் ஈகோ யுத்தம் உச்சத்தில் இருக்கிறதாம்.

இதனால் ஒருவர் நிகழ்ச்சியில் மற்றவர் தலைகாட்டாமல் தப்பித்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். வாரிசு எம்பி-யின் தந்தையார், கடைசி நேரத்தில் சூரியக் கூட்டணிக்குள் ‘கையை’ பிடித்து இழுத்து நிறுத்தியவர் என்பதால் அப்பாவையும் பிள்ளையையும் விசில் தம்பிகள் வேண்டாத விருந்தாளிகளாகவே பார்க்கிறார்களாம்.

மாவட்டத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்கு கதர்பார்ட்டிகளை விசில் பார்ட்டிகள் அழைப்பதே இல்லை. இதனால், கூட்டணியில் இருந்தும் இரண்டு கட்சிகளின் நிர்வாகிகளும் நீரும் நெருப்பும் அரசியல் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். “சூரியக் கூட்டணியில் நமக்குன்னு ஒரு மரியாதை இருந்துச்சு.

ஆனா இங்க, நம்மள யாரும் கண்டுக்கிறதே இல்லை” என்று கதர் சிங்கங்கள் அண்மையில் வாரிசு எம்பி-யிடம் கவலையைக் கொட்டினார்களாம். அவர்களுக்கு கூல் சொன்ன எம்பி, “முறையான அழைப்பு இருந்தால் மட்டும் விசில் பார்ட்டி நிகழ்ச்சிகளில் கலந்துக்குங்க. இல்லாட்டி போக வேண்டியதில்லை. நமக்கு மரியாதை இல்லாத இடத்துக்கு நாம் போக வேண்டியது இல்லை” என்று சொன்னாராம்.

SCROLL FOR NEXT