தூங்கா நகரத்தில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தீவிரமாக நடக்கிறது. தனியார் நிறுவனத்துக்குத் தரப்பட்டுள்ள தூய்மைப் பணி டெண்டரை ரத்து செய்து மாநகராட்சியே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் இவர்களது முக்கியமான டிமாண்ட். சூரியன் ஆட்சியில் மலைக்கோட்டை மந்திரி தான் இந்த தனியார் நிறுவனத்தை பணி அமர்த்தினாராம்.
விசில் ஆட்சி வந்ததும் அதன் எம்எல்ஏ-க்கள் தூங்காநகரில் எங்கெல்லாம் குப்பை அள்ளப்படாமல் கிடக்கிறதோ அங்கெல்லாம் போய் வீடியோ எடுத்து ரீல்ஸ்களைப் போட்டுக் கலக்கினர். வில்லங்க வசனம் பேசும் மாவட்ட அமைச்சரும் தனியார் நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்யச் சொல்லி மாநகராட்சியை நெருக்குமளவுக்குப் போனார். இதனால் கடும் நெருக்கடிக்கு உள்ளான தனியார் நிறுவனம், அமைச்சர், எம்எல்ஏ-க்கள் தரப்புகளிடம் ’தனியாக’ பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் என்ன ‘தீர்வு’ எட்டப்பட்டதோ தெரியவில்லை. முன்பு தனியார் நிறுவனத்திடம் கடுமைகாட்டிய மாநகராட்சி ஆணையர், தற்போது பிளேட்டைத் திருப்பிப் போட்டிருக்கிறார். தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் நவம்பர் 13-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், “டெண்டர் குறைவாகப் போட்டால் அவர்களுக்கே மீண்டும் டெண்டரை கொடுத்தாலும் கொடுப்போம்” என்பது போல் பேச ஆரம்பித்திருக்கிறாராம் ஆணையர்.
அதேபோல், முன்பு குப்பை ரீல்ஸ்களைப் போட்டு நாறடித்துக் கொண்டிருந்த ஆளும் கட்சி எம் எல்ஏ-க்களும் அமைச்சரும் இப்போது இந்த விவகாரத்தில் சப்த நாடியும் அடங்கிக் கிடக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, மறுபடியும் அவங்களுக்கேவா என்று கொதித்துப் போயிருக்கும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.