மன உளைச்சலில் ஜெயில் மாவட்ட விசில் எம்எல்ஏக்கள் | உள்குத்து உளவாளி

மன உளைச்சலில் ஜெயில் மாவட்ட விசில் எம்எல்ஏக்கள் | உள்குத்து உளவாளி
Updated on: 
1 min read

ஜெயில் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 4-ல் விசில் தான் விக்டரி அடித்திருக்கிறது. அந்த 4 பேரும் இப்போது நிம்மதி இல்லாமல் உழன்று கொண்டிருக்கிறார்களாம். இவர்களோடு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க்கடவுள் பெயர் கொண்ட மாவட்ட முதன்மைப் புள்ளி கரைசேர முடியாமல் தோற்றுப் போனார். ஆனாலும் அண்ணனின் அதிகார தோரணை மட்டும் குறையவில்லையாம்.

எதுவாக இருந்தாலும் தன்னைக் கேட்காமல் நடக்கக் கூடாது என்பதில் ’கெட்டியாக’ இருக்கும் தமிழ்க்கடவுள், 2 வாரத்துக்கு ஒருமுறை ‘விலையில்லா விருந்தகம்’ என்ற பெயரில் மக்களுக்கு அன்னதானம் செய்கிறாராம். அதற்கான செலவுகளுக்காக எம்எல்ஏ-க்களை இன்ஸ்டால்மென்டில் இம்சிக்கிறாராம்.

அவர்கள் கொஞ்சம் யோசித்தாலும், “நான் டிக் அடிக்கலைன்னா உங்களுக்கு சீட்டே கிடைச்சிருக்காது பாத்துக்கோங்க. மினிஸ்டரா இருந்தாலும் மாவட்டத்துக்குள்ள வர்றதுன்னா என்னைக் கேட்டுத்தான் வரணும்” என்று உருட்டுகிறாராம். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் எம்எல்ஏ-க்கள், “ஒண்ணு, இவர மாவட்டப் பொறுப்புல இருந்து மாத்துங்க.

இல்லாட்டி, எங்க தொகுதிகளுக்கு எங்களயே மாவட்டச் செயலாளரா போட்டுருங்க” என்று மகிழ்ச்சி மாண்புமிகுவுக்கு தனித்தனியாக தாக்கீது அனுப்பி இருக்கிறார்களாம். தமிழ்க் கடவுளாரின் தாட்பூட் தஞ்சாவூர் நடவடிக்கைகளுக்குப் பயந்து 2 எம்எல்ஏ-க்கள் அவர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குப் போவதையே கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்து வருகிறார்களாம். இதற்கு நடுவே, தன்னை ஆவின் தலைவர் பதவிக்கு சிபாரிசு செய்ய வேண்டும் என 4 எம்எல்ஏ-க்களுக்கும் இப்போதே அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறாராம் கடவுள்.

மன உளைச்சலில் ஜெயில் மாவட்ட விசில் எம்எல்ஏக்கள் | உள்குத்து உளவாளி
‘தன்னிலை மறக்கும்’ எம்எல்ஏ சம்பவங்கள் | உள்குத்து உளவாளி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in