“சொந்தக் கட்சிக்காரங்களே சூனியம் வெச்சுட்டாங்க” என்ற புலம்பலுடன் அண்மையில் மணாளனுடன் ஜோடியாக வந்து இலைக் கட்சியில் இடம்பிடித்த ‘கிரி’ மாவட்டத்தின் முன்னாள் சூரியக் கட்சி சேர்மன், மக்களவைத் தேர்தலிலேயே சீட்டுக்கு மோதினாராம். அது நடக்காததால் இம்முறை ‘கிரி’ தொகுதியில் சீட் கேட்கும் திட்டத்தில் இருந்தாராம்.
ஆனால், இவருக்கும் சூரியக் கட்சியின் மாவட்ட முதன்மைப் புள்ளிக்கும் ஆரம்பம் முதலே ஏழாம் பொருத்தமாம். வருங்கால அமைச்சர் கனவில் இருக்கும் மாவட்டப் புள்ளிக்கு ‘சேர்மனின்’ வளர்ச்சி சுத்தமாக ஜீரணிக்கவில்லையாம்.
இந்த நிலையில், ’பசைக்கு’ பஞ்சமில்லாத வரான ’சேர்மனுக்கு’ சீட் கிடைத்தால் கண்டிப்பாக வெற்றிபெற்று தனக்கே போட்டியாக வந்து நின்றாலும் நிற்பார் என்று கணக்குப் போட்டே ‘சேர்மனை’ பதவியை விட்டு இறக்கி, அவரை குடும்ப சகிதம் இலைக் கட்சியில் குடியேற வைத்துவிட்டாராம்.
முதலில், பனையூர் பக்கம் போகலாம் என்று தான் நினைத்தாராம் ‘சேர்மன்’. ஆனால், அக்கம் பக்கத்தில் அவருக்கு யோசனை சொன்னவர்கள், “உங்களைப் பதவியை விட்டு இறக்கியவர்கள், நாளைக்கே ஏதாவது ஊழல் வழக்கைப் போட்டு குடைச்சல் கொடுத்தாலும் கொடுக்கலாம். அப்படி குடைந்தால் சமாளிக்க உங்களுக்கு இலைக் கட்சிதான் சரியான சாய்ஸ்” என்று சொல்லி ரூட்டை மாற்றிவிட்டார்களாம்.