

தேசியக் கட்சியில் இருக்கும் மறைந்த முக்கிய தலைவர் ஒருவரின் பேத்தியானவருக்கு இம்முறை பெண்கள் கோட்டாவில் சீட் வாங்கிக் கொடுக்க ரொம்பவே மெனக்கிடுகிறாராம் அக்கட்சியின் ‘வெல்த்’ தலைவர். கனத்த உடம்பாக இருந்த ‘பேத்தி’ தனது உடல் எடையைக் குறைத்து ‘ஸ்லிம்’ ஆக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இதற்கான செலவுக்கும் திருவாளர் ‘வெல்த்’ உதவினாராம்.
அத்தோடில்லாமல், ‘பேத்தி’ தனியாக ‘பியூட்டி க்ளினிக்’ தொடங்கி வருமானம் பார்ப்பதற்கான வழிவகைகளையும் ‘வெல்த்’ தலைவர் தான் ‘வெல்கம் போட்டு’ செய்து கொடுத்தாராம். இதையெல்லாம் பார்த்துவிட்டு கட்சிக்குள் இருக்கும் மாதரசிகள் மனப் புழுக்கத்தில் இருக்கிறார்களாம். இந்த நிலையில், மாதரணியில் இருக்கும் முதன்மைப் புள்ளியானவர் இம்முறை சென்னை அல்லது தென்கோடியில் ஒரு தொகுதியில் குதிக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.
ஆனால், அதைக் குலைக்கும் விதமாக ‘பேத்தி’க்கு மகளிர் கோட்டாவில் அட்வான்ஸ் ‘துண்டு’ போட்டு வைத்திருக்கிறாராம் ‘வெல்த்’. இதைத் தெரிந்து கொண்டு தான், “கட்சியில் மகளிரை
மதிப்பதே இல்லை” என்று பொதுவெளியில் பொங்கிவெடிக்கிறாராம் மாதரணியின் முதன்மைப் புள்ளி. இவருக்கு இம்முறை சீட் கிடைக்காத பட்சத்தில் ‘பேட்டை’ ஆபீஸ் பக்கம் பெரும் குஸ்தி நடக்கலாம் என்கிறார்கள்.