சபையில் மாற்றுத் தலைவராக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சங்கரமான மக்கள் பிரதிநிதி இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டு கிட்டத்தட்ட தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறாராம். சங்கரமானவர் ஏற்கெனவே காதலியைக் கரம்பிடித்தவர். இருப்பினும் திருமண பந்தத்தில் ஏதோ கொஞ்சம் திகட்டலாம். அதனால், விவகாரம் விவாகரத்து வரைக்கும் போயிருக்கிறதாம்.
இது தொடர்பான வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இன்னொரு வாழ்க்கைக்கு அடிபோட்டு விட்டாராம் அண்ணன். புதுசா வந்த பெண்ணும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே வண்டியை ஓட்டுறது. எனக்கு ஒரு வழியச் சொல்லுங்க. இல்லாட்டி எனக்குத் ‘தெரிஞ்ச’ வழியப் பாக்க விடுங்க” என்று தெலுங்கு வில்லன் கணக்காய் சிணுங்கலாய் மிரட்டினாராம்.
இப்படியே விட்டா, வண்டி முட்டுச் சந்துக்கு திரும்பிவிடுமோ என மிரண்ட சங்கரமானவர், அன்புக் காதலியை செந்தூர் பக்கம் கூட்டிச் சென்று கந்தன் சாட்சியாக கரம்பிடித்து விட்டாராம்.
இருந்தாலும் இந்த நேரத்தில் சொந்த ஊர்ப்பக்கம் திரும்பினால் தேர் தெருவுக்கு வந்துவிடும் என நினைத்து கந்தன் காலடியிலேயே காவல் இருக்கிறாராம். தொகுதிப் பக்கமிருந்து யாராவது போன் போட்டால், “மதுராந்தகம் எலெக் ஷன் டூட்டில இருக்கேன். எதுவா இருந்தாலும் வந்து பேசிக்கலாம்” என்று சமாளிக்கிறாராம்.
இதற்கு நடுவில், யாராவது வீட்டுப் பக்கம் போய் குசலம் விசாரித்து குடும்பத்துக்குள் கும்மி அடித்துவிடக் கூடாது என்பதற்காக, “யாராக இருந்தாலும் அண்ணனை பாக்கணும்னா கட்சி ஆபீஸுக்கோ எம்எல்ஏ ஆபீஸுக்கோ வந்து பாருங்க” என்று விசுவாசிகள் விளம்பரம் செய்திருக்கிறார்களாம். இருந்தாலும் அண்ணனுக்கு ஒத்தாசையாக இருந்தவர்கள் ‘செந்தூர் விவாகத்தை’ “யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்லிச் சொல்லியே பலபேருக்கு பாஸ்பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். விஷயத்தைக் கேட்டவர்கள், “ஏன்டா... வடிவேலன் வதம் செஞ்ச இடமாச்சேடா செந்தூரு. நம்மாளு அங்கயா போகணும்” என்று சென்டிமென்ட் வசனம் பேசுகிறார்களாம்.