மலைக்கோட்டை மாநகரில் இருக்கும் காக்கி அதிகாரிகள் சிலர் இன்னமும் பழைய பாசத்தில் சூரியக் கட்சி விஐபிக்களுக்கு விசுவாசமாக இருப்பதாக பரவலாகப் பேச்சு இருக்கிறது. அண்மையில் மீசைக்கார முன்னாள் மாண்புமிகு சம்பந்தப்பட்ட இடங்களில் ‘பிரியமான சோதனை’ நடத்த ஆளும் தரப்பு திட்டமிட்டபோது, கரப்ஷன் ஒழிப்புத்துறையில் இருக்கும் அதிகாரி ஒருவர் அதை முன்கூட்டியே மீசைக்காரர் வட்டத்துக்கு லீக் செய்ததாக முன்பே சொல்லி இருந்தோம். இந்நிலையில், ஆளும் கட்சியின் சந்தேக வளையத்துக்குள் சிக்கியசாஸ்தா கடவுளின் பெயர் கொண்ட அந்த அதிகாரியை ‘குறிச்சி’ மாவட்டத்துக்கு தூக்கி அடித்துள்ளனர்.
இதேபோல, மலைக்கோட்டை நகரில் உளவு சொல்லும் பிரிவில் இருந்த பழைய மூன்றெழுத்து சினிமா இயக்குநர் பெயர் கொண்டவரை தென் கோடி கடல் மாவட்டத்துக்கு தூக்கி அடித்துள்ளனர். இதேபோல, சூரியக் கட்சி மாண்புமிகுக்களால் ‘தொலை நோக்குச்’ சிந்தனையுடன் ஆங்காங்கே முன்கூட்டியே செட் பண்ணி உட்கார வைக்கப்பட்ட இன்னும் சில காக்கி அதிகாரிகளை கணக்கெடுக்கும் பணி நடக்கிறதாம்.
அந்த லிஸ்ட் ரெடியானதும் அவர்களையும் தெற்கு வடக்காக தூக்கி அடிக்கப் போகிறார்களாம். இது தெரிந்து, சந்தேக வளையத்துக்குள் இருக்கும் காக்கி அதிகாரிகள் சிலர் ஆளும் கட்சிக்கு அவுட்டரில் இருந்து ஆலோசனை வழங்கும் அரண்மனைப் பூசாரிகளைத் தேடி நீலாங்கரைப் பக்கம் படையெடுக்கத் தொடங்கி இருக்கிறார்களாம்.