இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் தொகுதியின் வெற்றியை மானப் பிரச்சினையாக பார்க்கிறதாம் சூரியக் கட்சி. அதற்காகவே அங்கு பவர்ஃபுல்லான வேட்பாளரை களமிறக்கி உள்ளதாம். இந்த நிலையில், கடந்த 2021-ல் இங்கு ‘புயல்’ தலைவர் கட்சியின் புரட்சி வேட்பாளராக போட்டியிட்டு, தற்போது தனிக் கட்சி தொடங்கிவிட்ட மல்லையானவரை சூரியக் கட்சித் தலைவர் 2 நாட்களுக்கு முன்பு தனியே அழைத்து, தொகுதியில் வெற்றி வாய்ப்பு பற்றி கருத்து கேட்டாராம்.
அதற்கு அவர், “அந்த தொகுதி பற்றி நல்லா தெரியும் தலைவரே. 1989-ல தமிழகம் முழுக்க சூரியக் கட்சி அலை அடிச்சப்போகூட அங்கே மட்டும் சேவல்தான் கூவிடிச்சி. அந்த தேர்தலில் இருந்து 2021 தேர்தல் தவிர்த்து மற்ற அனைத்து தேர்தல்களிலும் எதிர்க்கட்சிக்கே அந்த மக்கள் வாக்களிச்சிருக்காங்க. அதனால, உங்களுக்கு வெற்றி கன்ஃபார்ம்.
தாங்கள் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த எம்எல்ஏ 21 நாளில் எதை எதிர்நோக்கி ராஜினாமா செய்தார், இப்போது எதுக்காக மீண்டும் போட்டியிடுறார்னு அந்த மக்கள் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. அதனால, விசில் அடிக்கிறவங்க அங்கு ஓட்டு கேட்கப்போறதே கஷ்டம்’’ என்று சொன்னாராம். இதைக் கேட்டு சூரியக் கட்சி தலைவர் ரொம்பவே உற்சாகமாகிட்டாராம்.