கோப்புகளைத் திறந்தாச்சு கொடியை நாட்டியாச்சு என்றெல்லாம் விசில் பார்ட்டிக்காரர்கள் வீரவசனம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் கேட்டு சூரியக் கட்சி பெருந்தலைகள் உள்ளுக்குள்ளயே சிரிக்கிறார்களாம். அண்மையில், மலைக்கோட்டை மாநகரத்து பெருந்தலை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சோதனைக்கு ஆட்களை அனுப்பினார்கள்.
ஆனால், அதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே அதுகுறித்த தகவல் பாஸாகிவிட்டதாம். “அநேகமா ஞாயிற்றுக்கிழகை கடா வெட்டு இருக்கும்” என்று சிக்னல் கொடுத்திருந்தார்களாம். அதற்கேற்ப, பெருந்தலை அனைத்து ‘முன்னேற்பாடுகளையும்’ செய்து வைத்து விட்டாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கிளப்புவதாக இருந்த சோதனை வண்டிகளை ஒரு நாள் முன்னதாகவே (ட்ரிக்காம்) கிளப்பிக் கொண்டு போய் ஒன்றுக்கும் உதவாக சில பேப்பர்களை அள்ளிக் கொண்டு வந்தார்களாம். அதிகாரத்தில் இருக்கும்போது தனது மண்டலத்தில் தனக்கு தோதான அதிகாரிகள் சிலரை சம்பந்தப்பட்ட துறையில் ஆங்காங்கே திணித்துவைத்து விட்டாராம் அந்தப் பெருந்தலை.
அதில் அவரது சொந்த ஊர்க்காரர் ஒருவரும் இருக்கிறாராம். இந்த விசுவாச வட்டமானது எந்த ஆபரேஷன் நடந்தாலும் அதை முன்கூட்டியே தெரிவித்து விடுகிறதாம். “இந்த செட் - அப்பை வைத்துக் கொண்டுதான் ஊழலைத் தோண்டித் துருவ கடப்பாரையுடன் புறப்பட்டிருக்கிறது விசில் அரசு” என்று காக்கிகள் வட்டாரத்திலேயே சிலர் கலர்க் கலராய் கலாய்க்கிறார்கள்.