மறுசீரமைப்பில் ‘அவார்டு நகர்’ மாவட்ட சூரியக் கட்சி மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாவட்டத்துக்கு தற்போது பொறுப்பில் இருக்கும் ‘கோல்டு’ தலைவரே செயலாளராக நீடிப்பார் என்கிறார்கள். தலைமை அவரை மாநில அல்லது மண்டலப் பொறுப்பில் நியமிக்க ஆலோசிக்கிறதாம்.
அப்படியே இருந்தாலும் தனக்கு வடக்கு மாவட்டமும் வேண்டும் என்று கேட்கும் திட்டத்தில் இருக்கிறாராம் மிஸ்டர் ‘கோல்டு’. அதேபோல், கிழக்கு மாவட்டத்துக்கு புதிதாக எம்எல்ஏ-வாக வந்திருக்கும் ‘கடல்’ புள்ளியை நியமிக்க ஒரு பேச்சு ஓடுகிறதாம். ஆனால், மீசைக்கார அண்ணாச்சி தனது வாரிசை அந்த இடத்தில் அமர்த்தி அழகுபார்க்கத் துடிக்கிறாராம்.
அதுமட்டுமல்லாது மேற்கு மாவட்டத்துக்கும் தனது சிஷ்யகோடியான ‘காதல் கொண்டேன்’ நாயகன் பெயர் கொண்டவரை முன்னிறுத்தப் பார்க்கிறாராம் மீசை. ஆனால், அந்த இடத்துக்காக காத்திருக்கும் ‘தங்கமான’ எக்ஸ் மக்கள் பிரதிநிதியோ, “அப்படி ஒண்ணு நடந்துச்சுன்னா ஒன்றியப் பதவியை ராஜினாமா பண்ணிருவேன். என்னைவிட ஜூனியரான அந்தப் பையனுக்கு கீழ இருந்தெல்லாம் அரசியல் பண்ணணும்னு எனக்கு அவசியம் இல்லை” என்று தன்மான வசனம் பேசிக் கொண்டிருக்கிறாராம்.