தமிழகம்

கிறுகிறுக்கும் ‘கிரி’ மாவட்ட விசில் முகாம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கட்சியை வளர்க்கவும், கோஷ்டிப் பூசலை சமாளிக்கவும் எம்எல்ஏக்களை எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் ஆக்குவது, ஒரு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என அதிகாரப் பரவலை அதிகரிப்பது என திட்டம் வகுத்து வருகிறது விசில் பார்ட்டி. ஆனால், அதை வைத்தே ‘கிரி’ மாவட்டத்தில் களைகட்டுகிறது பஞ்சாயத்து.

இந்த மாவட்டத்தின் மத்திய பகுதிக்குச் செயலாளராக இருப்பவர் தேர்தலுக்கு முன்புவரை ‘கிரி’ மாவட்டத் தலைநகரில் அலுவலகம் ஏதும் திறக்காமல் இருந்தார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு தலைநகரிலும் அலுவலகம் திறந்து அரசியல் நடத்த ஆரம்பித்துவிட்டார். அதற்கு காரணம், தலைநகர் தொகுதிக்கு விசில் எம்எல்ஏவாக தேர்வானவர்.

எம்எல்ஏக்கள் எல்லாம் மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்பட்டால் மாவட்டத் தலைநகருக்கு சிட்டிங் எம்எல்ஏவே செயலாளர் ஆகிவிடுவாரோ என்ற எச்சரிக்கை உணர்வில் எம்எல்ஏவுடன் மத்திய மா.செ. ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இதனால், தலைநகரில் மாவட்டம் ஒருபக்கமும், எம்எல்ஏ ஒரு பக்கமுமாக கோஷ்டி அரசியலில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். ஒருவர் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில், போராட்டங்களில் இன்னொருவர் பங்கேற்பதில்லை என்கிற அளவில் இருக்கிறது ‘பாசப் பிணைப்பு’.

இதை பார்த்துவிட்டு இருவரது ஆதரவாளர்களும் தங்களது ஃபிளெக்ஸ் பேனர்களில் மற்றவர்களின் படங்களை மறந்தும்கூட போட்டுவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால், சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தாராம் ‘சுசு’ என்ற கதையாக கிறு கிறுத்துக் கிடக்கிறது ‘கிரி’ மாவட்ட விசில் முகாம்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT