‘கோட்டை’ மாவட்ட விசில் கட்சிக்குள் புதிதாக நுழைந்திருக்கும் இலைக் கட்சியின் விஜயமானவருக்கு கட்சிப் பொறுப்புகளையும் வழங்கி இருக்கிறார்கள். இதை வைத்துக்கொண்டு தினம் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்.
இதற்கிடையே, விசில் அரசு அறிவித்திருக்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் விஜயமானவரை ‘வளப்படுத்தும்’ நோக்கிலேயே அறிவிக்கப்பட்டிருப்பதாக அங்குள்ள வாக்காளர்களே வாயைப் பிளக்கிறார்கள்.
இலைக் கட்சியில் செயல்வடிவம் கொடுக்கப்பட்ட அந்த ‘ரிவர்கள் இணைப்புத் திட்டத்தில்’ ஏற்கெனவே ஆறேழு கி.மீ. தூரத்துக்கு கால்வாய் வெட்டியது விஜயமானவருக்கு வேண்டப்பட்ட கம்பெனிதானாம். ஆனால், சூரியன் ஆட்சியில் அந்த திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார்கள்.
இப்போது விசில் ஆட்சியில் அதே திட்டத்துக்கு ரூ.150 கோடி ஒதுக்கி இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தங்கள் மிகச் சரியாக விஜயமானவருக்கே என்று அடித்துச் சொல்கிறார்கள். இதேபோல, கிரானைட் பாலிஷிங் யூனிட் அமைக்கவும் நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் பூமிக்கு அடியில் கிரானைட் பாளங்கள் இருக்கும் என்பதை கணித்து நூற்றுக்கணக்கான ஏக்கர்களை சல்லிசான ரேட்டுக்கு முன்னமே வளைத்துப் போட்டு வைத்திருக்கிறாராம் விஜயமானவர்.
“இங்கே பாலிஷிங் யூனிட் வந்துவிட்டால் கிரானைட் குவாரிகளையும் தொடங்கி கல்லாக்கட்ட ஆரம்பித்துவிடுவார். ஆக மொத்தத்தில், அவர் போட்ட ஸ்கெட்ச் படியே அனைத்து வேலைகளும் அமர்க்களமாய் நடக்கின்றன” என்கிறார்கள் ‘கோட்டை’ப்புரத்து மக்கள்.