சீமை மாவட்டத்தில் உள்ள ‘குடி’ மாநகரத்து மேயர் பதவிக்கு ஆளும் கட்சியில் இப்போதே ஆளாளுக்கு அலைமோதுகிறார்கள். ‘குடி’ தொகுதியைக் கைப்பற்றி மந்திரியாகவும் ஆகியுள்ள ‘மகாபிரபு’வானவர் யாரை கைகாட்டுகிறாரோ அவருக்குத்தான் மேயர் இருக்கை நிச்சயம்.
இந்த நிலையில், தேர்தல் சமயத்தில் சில பகுதிகளில் மந்திரிக்கான ‘பட்டுவாடா’க்களை கவனித்துக் கொண்ட ‘சபரி கடவுளானவர்’ தனக்குத் தான் மேயர் பதவி என நட்பு வட்டாரத்தில் விளம்பரம் செய்து வருகிறாராம். ஆரம்பத்தில் மந்திரியும் இதை ஆமோதித்த நிலையில், தற்போது அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
பக்கத்து தொகுதியில் விசில் சின்னத்தில் நின்று விளிம்பில் தோற்றுப்போன சிந்தாத ‘மணியானவரின்’ கணவரும் மந்திரியும் பள்ளித் தோழர்களாம். அந்தப் பழக்கத்தில் அவரது மனைவியை கட்சியில் சேர்த்து சீட்டுக்கும் சிபாரிசு செய்தவர் மந்திரிதானாம். செல்வச் சீமானின் குடும்பத்து மருமகளான அவர் நட்பு ரீதியில் மந்திரிக்கும் தன்னால் முடிந்த சில உதவிகளைச் செய்திருக்கிறாராம்.
இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்த மந்திரியானவர், சிந்தாத ‘மணியானவரை’ தனது ஊரின் மேயர் வேட்பாளராக பரிந்துரைக்கும் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனிடையே, கதர் பார்ட்டி சீமானானவர், “கூட்டணி தர்மப்படி மேயர் பதவியை எங்களுக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கேட்கும் மூடில் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டத்தினர் தனிக்கதை சொல்கிறார்கள்.