‘வளத்துறைக்கு’ மாண்புமிகுவாகி இருக்கும் ‘லட்சுமிகரமானவர்’ ‘வருமானத்துக்கு’ வழியில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
துறைசார்ந்த பணிகளை மதிநுட்பத்துடன் கையாள்வதில் சற்றே தடுமாற்றத்தில் இருக்கும் அவர், இப்போதைக்கு அதிகாரிகள் சொல்வதை அட்சரம் பிசகாமல் கேட்டு நடந்து வருகிறாராம்.
இலைக் கட்சி ஆட்சியின் போது தொடர்ச்சியாக பத்தாண்டு காலம் ’மாண்புமிகு’ தொகுதியாக இருந்த தொகுதிக்குத் தான் இப்போது இவர் மாண்புமிகுவாக வந்திருக்கிறார். அதனால் இவரைத் தேடி வருபவர்கள் அனைவருமே பழைய நினைப்பில் பெருத்த எதிர்பார்ப்புடன் வருகிறார்களாம்.
கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு டொனேஷன் கேட்டு வருபவர்கள் 50 ஆயிரம் ஒரு லட்சம் என எதிர்பார்க்கிறார்களாம்.
கெத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் அவர்கள் எதிர்பார்ப்பதைக் கொடுத்து அனுப்பும் அம்மணி, “பேரு தான் பெத்த பேரா இருக்கு. நம்ம நிலைமை நம்மளுக்குத் தான் தெரியும். இப்பவே ‘பாளையத்துல’ இருந்த ரெண்டு வீட்டுல ஒண்ண வித்தாச்சு.
எந்த வருமானமும் இல்லாம, வர்றவங்களுக்கு எல்லாம் இப்படியே குடுத்துக்கிட்டே இருந்தா இருக்கிற இன்னொரு வீட்டையும் விலை பேச வேண்டியதுதான்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்.
இதற்கு மத்தியில், தனியார் ‘பண்ணைக்காரர்களிடம்’ பலமாக பலனடைந்துவிட்டதாக திண்ணை காலியாகக் காத்திருக்கும் அவரது அரசியல் எதிரிகள் திட்டமிட்டு செய்தி பரப்பி வருகிறார்களாம்.