‘பட்ஜெட் கூட்டத் தொடரில் விசில் அரசாங்கத்தை ஒரு கை பார்க்காமல் விடமாட்டோம்” என சூளுரைத்திருக்கிறார் சூரியக் கட்சி ‘சின்னவர்’. அதற்கேற்ப அவர் பக்கா ஸ்க்ரிப்ட்டுடன் தயாராகி இருக்கும் நிலையில், “அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அதற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். இத்தனை நாளும் அவங்களோட இருந்துட்டு இப்ப நம்ம பக்கம் வந்திருக்கிற நம்மளோட கூட்டணிக் கட்சிகளின் ‘அமைச்சர் பெருமக்களை’ வெச்சே அவங்களுக்கு பதிலடி கொடுத்துக்கலாம்” என்று முதன்மையானவருக்கு ஆலோசகர்கள் அட்வைஸ் தந்திருக்கிறார்களாம்.
இது தொடர்பாக கூட்டணிக் கட்சி அமைச்சர்களிடம் விசில் பார்ட்டியின் மூத்த அமைச்சர்கள் பேசியதற்கு, “நான் ஓகே” என்று முதல் ஆளாக ஓகே சொல்லி விட்டாராம் சீறும் கட்சியின் அமைச்சர். ஆனால், கதர் பார்ட்டி அமைச்சர்கள், ‘நம்ம ஏதாச்சும் சொல்லப் போய் அவங்க எதையாச்சும் இழுத்து விட்டுட்டா என்ன பண்றது’ என கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்களாம். இருந்தாலும் அவர்களையும் வழிக்குக் கொண்டு வந்து சின்னவரை சிலிர்க்க வைக்கத் தயாராகி வருகிறதாம் விசில் பார்ட்டி.