இலைக் கட்சியின் கொங்கு மண்டல ‘மணியானவர்’ விழுப்புரத்தாரை நம்பி வீணாக போய்விட்டோமே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம். எடக்கானவருக்கு எதிராக வீரவசனம் பேசி புறப்பட்ட அவர், விசில் பார்ட்டியில் மண்டலப் பொறுப்பாளர் அளவிலான பதவியை எதிர்பார்க்கிறாராம்.
ஆனால், அத்தகைய பொறுப்பை இவருக்கு தர அந்தப் பார்ட்டியில் ரொம்பவே யோசிக்கிறார்களாம். அதேசமயம், போர்க்குரல் எழுப்பி புறப்பட்டுப் போனவர் போனதாகவே இருக்கட்டும். எக்காரணம் கொண்டும் இங்கேயே தங்கிவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம் மான்செஸ்டர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்புக்கு வந்திருக்கும் இலைக் கட்சி நிர்வாகிகள்.
அதனால், கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் யாராவது ‘மணியானவரின்’ பேச்சை எடுத்தாலே, “அந்தப் பேச்செல்லாம் இங்க பேசாதீங்க... உக்காருங்க. நமக்கு ஒரே தலைவர் எடக்கானவர் தான்” என்று அதட்டி உருட்டி உட்காரவைத்து விடுகிறார்களாம். ஒரு காலத்தில் ‘மணியானவரை’ வைத்து பலனடைந்தவர்களே இந்தக் காரியத்தை கர்ம சிரத்தையாய் செய்கிறார்களாம்.
இதனிடையே, விசில் கட்சிக்கு போவதற்குப் பதிலாக மலர் கட்சிக்கு மடைமாறிவிடலாமா என்ற யோசனையும் ‘மணியானவருக்கு’ இருக்கிறதாம். அவருக்குள் இருக்கும் இந்த சலனத்தைப் புரிந்துகொண்டு மலர் கட்சியும் ‘மணியானவரை’ இழுத்துப் போட்டு ‘மவுன்ட்’ தலைவரின் இடத்தை நிரப்பும் யோசனையுடன் தொடர்ந்து அவருடன் டச்சில் இருக்கிறதாம்.