பனையூர் பார்ட்டியில் இப்பவே உள்ளடி அரசியல் உச்சமெடுத்து ஆடுகிறதாம். இதுநாள் வரைக்கும் தன்னைத் தாண்டி யாரையும் தலைவரைப் பார்க்கவிடாமல் ‘பக்காவாக’ப் பார்த்துக் கொண்டாராம் கட்சியின் ‘மகிழ்ச்சி’ மனிதர்.
ஆனால், தலைவரின் நண்பரும் மெத்தப் படித்தவருமான ‘ராஜப்’ புள்ளி உள்ளே வந்த பிறகு அந்தக் கட்டுக்கோப்பு கலைந்து போனதாம். எதுவாக இருந்தாலும் ‘ராஜப்’ புள்ளி நேரடியாக தலைவரிடமே ஒன் டு ஒன் பேசிவிடுகிறாராம். இதனால் கட்சிக்குள் நடக்கும் பல விஷயங்கள் ’மகிழ்ச்சி’ மனிதருக்கு லேட்டாகத்தான் தெரியவருகிறதாம்.
தலைவரின் பிறந்த நாளை வட மாவட்டம் ஒன்றில் மன்றத்தினரை வைத்து அமரக்களமாக நடத்தி முடித்தாராம் ‘ராஜப்’ புள்ளி. இந்த விஷயம் லேட்டாக தனது காதுக்கு வந்ததும், தன்னைக் கேட்காமல் யாரும் எதுவும் செய்யக் கூடாது என்று மன்றத்தினருக்கு அணைபோட்டு வைத்தாராம் ‘மகிழ்ச்சி’ மனிதர்.
இந்த நிலையில், பார்டர் தேசத்தில் அண்மையில் தலைவர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தின் போது ‘ராஜப்’ புள்ளியின் காரை திடலுக்குள் விட போலீஸார் மறுத்து விட்டார்களாம். உடனே, ‘மகிழ்ச்சி’ மனிதருக்கு போன் அடித்தாராம். அவர் போனை எடுக்கவில்லையாம்.
உடனே, அவருக்கு பக்கத்தில் இருந்த இன்னொரு நபருக்கு போன் அடித்தாராம் ‘ராஜப்’ புள்ளி. “நீங்கள் போன் அடித்ததை ‘மகிழ்ச்சி’ கவனித்துவிட்டுத்தான் போனை எடுக்காமல் இருக்கிறார்” என்று போட்டுக் கொடுத்துவிட்டாராம் அந்த நபர்.
இதனால், வேறு வழியில்லாமல் பொதுக்கூட்ட திடலுக்குள்ளேயே போக முடியாமல் திரும்பிவிட்ட ‘ராஜப்’ புள்ளி, “என்னால் தனக்கு சிக்கல் வருமோ என நினைத்துக்கொண்டு எனக்கு இப்படி எல்லாம் இடைஞ்சல் செய்கிறார்” என்று ‘மகிழ்ச்சி’ மனிதர் குறித்து தனக்கு நெருக்கமான வட்டாரத்தில் புலம்பி வருகிறாராம்.