தமிழகம்

சுல்தான் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா வைத்து மைலேஜ் கூட்டும் கணக்கில் ‘மலர்ச்சி’ தலைவர் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘மலர்ச்சி’ தலைவர் சுல்தான் பேட்டையில் நடத்தும் நூல் வெளியீட்டு விழாவை வைத்து மீண்டும் மைலேஜ் எடுக்க நினைக்கிறாராம். முதலில் இந்த நூலை கதர் பார்ட்டியின் இளம் தலைவர் வெளியிட சூரியக் கட்சி தலைவர் பெற்றுக்கொள்வதாக ஏற்பாடாம். ஆனால், தேர்தல் முடிவுகள் தோசையைத் திருப்பிப் போட்டதால், குடியரசு துணைத் தலைவர் கையால் நூலை வெளியிட வைக்க வேலைகள் நடந்ததாம்.

‘‘எக்காரணம் கொண்டும், எந்தக் காலத்திலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக சம்பந்தப்பட்ட தலைவர்களை உள்ளே இழுக்கக் கூடாது என்று சொல்லி இருந்தாரே..?’’ என்று ‘மலர்ச்சி’ கட்சியில் இருந்து வெளியேறிய ‘மல்லபுரத்தார்’ சத்தமின்றி சுரண்டிவிட்டாராம். இதை வைத்தே இம்சையைக் கூட்டுவார்கள் என்று யோசித்த ‘மலர்ச்சி’ தலைவர் இறுதியில், கதர் பார்ட்டியின் இளம் தலைவர் நூலை வெளியிட, விசில் தலைவர் பெற்றுக் கொள்வதாக சார்ட்டை மாற்றினாராம்.

இந்த சூழலில், ‘‘இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா.. சிக்கலான இந்த நேரத்தில் சுல்தான் பேட்டைக்கு இந்த விழாவுக்காக நீங்கள் சென்றால் அதை வைத்தும் ட்ரோல் செய்வார்கள்” என்று அட்வைஸர்கள் ஆலோசனை சொல்ல, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் நாசூக்காக நழுவிவிட்டாராம் விசில் தலைவர். இந்த நிலையில், “தனது நூலில் ‘மலர்ச்சி’ தலைவர் நம்மையும் போட்டுத் தாக்கி இருப்பார்.

அப்படி இருக்க, நாமே அதை வெளியிடுவது சரியாக இருக்குமா?’’ என்று கேட்டு தமிழகத்தின் கதர் தலைகள் சிலர் இளம் தலைவருக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்களாம்.

வழக்கமாக ‘மலர்ச்சி’ பார்ட்டி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் கட்சி நிர்வாகிகள் தன்னெழுச்சியாகவே வண்டிபிடித்து வந்து சேர்ந்து விடுவார்கள். ஆனால், இந்த முறை அவர்களுக்கான பயண ஏற்பாடுகளை கட்சித் தலைமையே செய்திருக்கிறதாம். அந்த வகையில், மாவட்டத்துக்கு 20 முதல் 25 பேர் வரைக்கும் சுல்தான் பேட்டைக்கு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். நூல் வெளியீட்டு விழா முடிந்த மறுநாள் இவர்களுக்கு சுல்தான் பேட்டையை சுற்றிக் காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

SCROLL FOR NEXT