

கதர் பார்ட்டி மாவட்டத் தலைவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் மல்லபுரத்தில் நடந்து வருகிறது. எப்போதும் இல்லாத புது முயற்சியாக இந்த பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கும் டெல்லி தலைமை, பயிற்சியில் பங்கேற்றுள்ள 77 மாவட்டத் தலைவர்களும் மக்களின் பிரச்சினைகளை எப்படி அணுகுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்காக அவர்களை இரண்டு நாட்கள் இரவு பக்கத்தில் உள்ள மீனவ கிராமங்களில் தங்கவைத்து மக்களுடன் பேசவைத்தார்களாம். மறுநாள் அதுதொடர்பான அறிக்கையும் மாவட்டத் தலைவர்களிடம் இருந்து பெறப்பட்டதாம்.
இந்த முகாமில் பங்கேற்றுப் பேசுவதற்காக கதர் பார்ட்டியின் தேசிய இளம் தலைவர் 1-ம் தேதி மல்லபுரம் வருகிறார். அப்போது, 77 மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசும் அவர், மாவட்டத் தலைவர்கள் அடுத்த மூன்று வருடங்களுக்கு கட்சிக்காக ஆற்றவிருக்கும் பணிகள் குறித்தும் அதற்காக அவர்களுக்கு குடும்பத்தினர் அளிக்கவேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் பேசப் போகிறாராம்.
நிறைவாக, மாவட்டத் தலைவர்களின் குடும்பத்தினரோடு குழு புகைப்படமும் எடுத்துக் கொள்கிறாராம் இளம் தலைவர். இதற்காக மாவட்டத் தலைவர்களின் குடும்பங்களை இரண்டு நாட்கள் மல்லபுரத்தில் தங்கவைத்து உபசரிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம்.