தமிழகம்

சூரியக் கட்சி சிடுசிடு சீனியரின் ‘அப்ரோச்’ மாற்றம் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

சூரியக் கட்சியின் சிடுசிடு சீனியர் தலைவரானவர் அதிகாரத்தில் இருந்தபோது கட்சியினரை நல்ல நாள் பெரிய நாள் வந்தால் தான் அழைத்துப் பேசுவாராம். ஆனால் தோல்வி தந்த பாடமோ என்னவோ, இப்போது தனது தொகுதியில் இருக்கும் அடிமட்ட நிர்வாகி வரைக்கும் வம்படியாய் அழைத்துப் பேசுகிறாராம்.

தோல்வி சங்கடத்தால் தொகுதிப் பக்கமே வராமல் இருந்த அவர் தற்போது தொகுதியிலேயே முகாமிட்டிருக்கிறார். காலையிலேயே டி-சர்ட் சகிதம் வீட்டு முகப்பில் உட்கார்ந்து கொண்டு, தன்னை சந்திக்க வரும் கட்சியினரிடம் பொறுமையாக குசலம் விசாரிப்பவர், “வீட்ல பசங்க எல்லாம் என்ன பண்றாங்க... அவங்கள நல்லபடியா படிக்க வெச்சுருங்கப்பா. படிப்புத் தான் முக்கியம்” என்று அட்வைஸ் கொடுக்கிறாராம்.

அண்மையில், தனக்கு ரொம்பவே நெருக்கமான விசுவாசிகள் சிலரிடம் மனம்விட்டுப் பேசிய அவர், “தோல்வி எனக்குப் புதுசு இல்லை... ஏற்கெனவே ரெண்டுவாட்டி தோத்துருக்கேன். ஆனா, அது வேற இது வேற. ஒருவேளை, இப்ப நான் ஜெயிச்சு சபைக்குள்ள போயிருந்தாலும் திருச்சிக்காரர் மாதிரி நானும் தம்பிக்கு எடுத்துக் குடுத்துட்டு தான் உக்காந்துருக்கணும். அதனால ஒருவகையில, தோற்றதும் நல்லதுக்கேன்னு வெச்சுக்குவோம்.

இப்ப நம்ம அதிகாரத்துல இல்லைன்னாலும் எதுவா இருந்தாலும் அதிகாரிங்க நம்மகிட்டத்தான் யோசனை கேக்குறாங்க. இப்ப இருக்கிற மந்திரிகளுக்கு எந்தப் பிரச்சினைக்கு எங்க பேசுறதுன்னுகூட தெரியலைன்னு அவங்க எனக்குப் போன்போட்டுப் புலம்புறாங்க. ஜெயிச்சவங்ககூட சும்மா இருப்பாங்க போலருக்கு. மாவட்டச் செயலாளருங்க, ‘எந்த ஃபண்ட் வந்தாலும் எங்களுக்கு தகவல் சொல்லணும்’னு அதிகாரிங்ககிட்ட தோரணை காட்டுறாங்களாம்” என்று சொல்லிச் சிரித்தாராம்.

SCROLL FOR NEXT