மான்செஸ்டர் மாவட்டத்தின் ‘லூர்’ தொகுதி ஆளும் கட்சி எம்எல்ஏ-வானவர் தேர்தல் நேரத்தில் திடீர் இறக்குமதியாக கட்சிக்குள் வந்தவர். இதனால் விசில் கட்சியில் ஏற்கெனவே இருந்தவர்கள் சற்றே ஜெர்க் ஆகி இவரை கண்டுகொள்ளாமல் ஒதுங்கி நின்றார்கள்.
இவர்கள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தை புறநகர் மாவட்ட விசில் கட்சியின் ரெண்டெழுத்து மாவட்ட முதன்மைப் புள்ளியும் கண்டும் காணாமல் இருந்துவிட்டாராம். அதனால் தொடக்கம் முதலே தனியாளாகவே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு விசில் செல்வாக்கில் ‘சுமுக’ வெற்றியும் பெற்றுவிட்டார்.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு மாவட்ட முதன்மைப் புள்ளியை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வந்தமர தற்போது காய்நகர்த்துகிறாராம் எம்எல்ஏ. இதற்காக ஒன்றியச் செயலாளர்களிடம் முதன்மைப் புள்ளியின் செயல்பாடுகள் குறித்து புகார் கடிதங்களை சீக்ரெட்டாக எழுதி வாங்கி வருகிறாராம். “கூடிய சீக்கிரமே நான் தான் மாவட்டச் செயலாளராக வரப் போகிறேன்.
இப்போது எனது பேச்சைக் கேட்காமல் யாரெல்லாம் ‘அவருக்கு’ ஆதரவாக வேலை செய்கிறீர்களோ அவர்களுக்கெல்லாம் உள்ளாட்சித் தேர்தலில் சீட் கொடுக்க சிபாரிசு செய்யமாட்டேன்” என்று எம்எல்ஏ எச்சரிக்கை தொனியில் பேசுவதால், எந்த ‘மாவட்டம்’ சொல்வதைக் கேட்பது என்று தெரியாமல் ஒன்றியச் செயலாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்களாம்.