தமிழகம்

வாரிசு எம்.பி.க்கு டஃப் ஃபைட் கொடுக்கும் கதர் பார்ட்டி தலைவர் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கதர் பார்ட்டி மாநிலத் தலைவர் பதவிக்கு தனது பெயரை தலைமை பரிசீலிக்கும் என பெரிதும் எதிர்பார்த்தாராம் சீமைத் தொகுதி வாரிசு எம்பி. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பைத் தராததோடு மட்டுமல்லாது, அவருக்கும் அவரது தகப்பனாருக்கும் அவ்வளவாய் பிடிக்காத அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ‘ஜெம்’ தலைவரை மாநிலத் தலைவர் பதவியில் அமர்த்திவிட்டது டெல்லி தலைமை.

இதனால் தலைமை மீது கொஞ்சம் கடுப்பில் இருக்கும் வாரிசு, “தலைவர்களை மாற்றி மாற்றி நியமிப்பதால் மட்டும் கட்சி வளர்ந்துவிடாது” என்று கருத்துச் சொல்லி வருவதுடன், “நம்மாளுங்க யாரும் ‘ஜெம்’ தலைவரின் படத்தைப் போட்டு போஸ்டர் அடிக்கவோ ஃபிளெக்ஸ் வைக்கவோ கூடாது” என தமது ஆதரவாளர்களுக்கு அணை போடுகிறாராம்.

‘ஜெம்’ தலைவரோ, “அந்தத் தம்பி என்னங்க சொல்றது... நானே சொல்றேன். அகில இந்திய தலைவர் படத்தையும் நம்ம இளம் தலைவர் படத்தையும் மட்டும் போடுங்க. என் படமெல்லாம் போடவேண்டாம்” என்று வாரிசு எம்பி-க்கு டஃப் ஃபைட் கொடுக்கிறாராம்.

இதனிடையே, அண்மையில் சேலத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் விளக்கக் கூட்ட மேடையில் ‘ஜெம்’ தலைவரின் படத்தை பேக் டிராப்பில் வைத்திருப்பதாக தகவல் வந்ததாம். “அதை எடுத்தால் தான் மேடைக்கு வருவேன்” என்று பிடிவாதம் காட்டிய மிஸ்டர் ‘ஜெம்’, அந்த பேக் டிராப் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே மேடை ஏறினாராம்.

SCROLL FOR NEXT