

‘‘மக்களே... யாராவது லஞ்சம் கேட்டால் என் பேரைச் சொல்லுங்கள்” என்கிறார் முதன்மையானவர். ஆனால், அவரது அரசவை பிரதானிகளையே அவரால் கட்டுப்படுத்தி வைக்கமுடியவில்லையாம்.
“மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்து நமது கையில் ஆட்சியை ஒப்படைத்திருக்கிறார்கள். அதனால் கொஞ்ச நாளைக்காச்சும் அனைவரும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு இருங்கள்” என்று தனது சகாக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை மணி அடித்திருந்தாராம் முதன்மையானவர்.
இருப்பினும் இப்போது சகாக்கள் பற்றி வரும் புகார்களை அவரால் சமாளிக்க முடியவில்லையாம்.
இதற்கு மத்தியில், ‘பெருத்த’ எதிர்பார்ப்புகளுடன் பிற கட்சிகளில் இருந்து வந்து தஞ்சம் புகுந்திருப்பவர்களும் கட்சிக்குள் தனி லாபியை ஆரம்பித்துவிட்டார்களாம்.
‘அம்மா’ பாணியில் அமைச்சரவையில் அடிக்கடி அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனச் சொல்லப்படுவதால் ‘வசந்தம் தேடி’ வந்தவர்களில் பலரும் மந்திரி கனவில் மிதக்கிறார்களாம். அதேசமயம் ‘மாற்றம்’ என்ற தகவல் லீக்கானதால் சிட்டிங் மந்திரிகள் சிலர் தங்கள் துறை சார்ந்து சிறப்பாகச் ‘சிந்திக்க’ ஆரம்பித்துவிட்டார்களாம்.
இதை எல்லாம் மனதில் வைத்துத் தான், “யாருக்கும் லஞ்சம் கொடுக்காதீர்கள்” என்று முதன்மையானவர் சூசகமாகச் சொன்னார் போலிருக்கிறது.