‘ரீல்ஸ் புகழ்’ மாண்புமிகுவை சொந்த மாவட்டத்தில் அவரது கட்டபொம்மன் சமூகம் தோளில் தூக்கிக் கொண்டாடுவதாக பரவலாக பேச்சுக் கிளம்பியது. இதையடுத்து, இப்போது, “யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம்” என தனது இனத்தாருக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம் ‘ரீல்ஸ்’.
மேலும், தனது சமூகத்தார் யாரும் தனக்காக பத்திரிகை விளம்பரங்களையும் கொடுக்க வேண்டாம் என்றும் ‘பிரேக்’ போட்டிருக்கிறாராம்.
அதேபோல், தேர்தல் சமயத்தில் ‘பட்டாசு’ நகர் தொகுதியில் உள்ள ‘நாச்சியார்புரம்’ கிராமத்தில் தனது சாதிக்காரரின் இல்லத்தில் தங்கித்தான் தேர்தல் பணிகளை கவனித்து வந்தார் ’ரீல்ஸ்’. இப்போது அதையும் தவிர்த்துவிட்டு, ‘அவார்டு’ நகர் பக்கம் இருக்கும் தனது சொந்த வீட்டுக்கே போய்விடுகிறாராம்.
இந்த நிலையில், ‘ரீல்ஸ்’ மாண்புமிகுவின் செயல்பாடுகளை தொடர்ச்சியாக மீடியாக்கள் விமர்சனம் செய்து வீடியோக்களை வெளியிடுகின்றன. இதனால் தர்மசங்கடத்துக்கு உள்ளாகும் ‘ரீல்ஸ்’ தற்போது, “அலுவல் ரீதியிலான விசிட்டாக இருந்தாலும் எனது வருகையை மீடியாக்களுக்கு தயவு செய்து சொல்ல வேண்டாம். அவர்கள் வந்தாலே எதையாவது இழுத்துவிட்டு துயரத்தைக் கூட்டிவிடுகிறார்கள்” என்று கட்சியினரிடமும் அதிகாரிகளிடமும் கண்டிப்புடன் சொல்லி வைத்திருக்கிறாராம்.
அதேசமயம், முன்பு பிஹார் கிஷோர் டீமில் பணி செய்த வீடியோ டீம் ஒன்றை நிரந்தரமாக தன்னுடன் பணிக்கு அமர்த்தி வைத்திருக்கிறாராம். ‘ரீல்ஸ்’ எங்கு சென்றாலும் அவருக்கு முன்னதாக அங்கே ஆஜராகிவிடும் இந்த டீம், எதையெல்லாம் ரீல்ஸ் எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் எடுத்து கவனமாக ஆடியோவை கட் பண்ணிவிட்டு அதை மீடியா மக்களுக்கு அனுப்பி வைக்கிறதாம்.