தமிழகம்

சூரியக் கட்சியின் கீர்த்தி மிகுந்தவரின் ‘வளர்ச்சி’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘தூங்கா நகரத்து மேம்பாலத் தூண்களில் நித்தம் ஒரு தூணில் ‘நடமாடும்’ அலுவலகங்களைத் திறந்து அதன் மூலம் தனது துறை சார்ந்த ‘மேலதிக’ வருமானங்களை வசூல் செய்து ‘சாதனை’ படைத்தவர் சூரியக் கட்சியின் கீர்த்தி மிகுந்த (முன்னாள்) மாண்புமிகு.

“சொந்தக் கட்சியினர் வைத்த சூனியம் தான் நமது தோல்விக்கு முக்கிய காரணம்” என்று ஊரைக் கூட்டி ஓபன் மைக்கிலேயே முகாரி பாடிய அவருக்கு தூங்கா நகருக்கு வெளியே குளு குளு திருமண மண்டபம் ஒன்று இருக்கிறதாம். இதையொட்டியே அதி நவீன பிரின்டிங் பிரஸ் ஒன்றையும் அதிகாரத்தில் இருக்கும் போதே திறந்திருக்கிறாராம்.

மகனுக்காக திறக்கப்பட்ட இந்த பிரஸ்ஸில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 ‘சி’ மதிப்பிலான அதி நவீன பிரின்டிங் மெஷின்களை நிர்மானித்து வைத்திருக்கிறார்களாம்.

‘பவரில்’ இருந்தபோது, தமிழகம் முழுவதும் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களின் பைகள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவற்றில் கடை பெயர்களைப் பிரின்ட் செய்து தருவதற்கான ஆர்டர்களை மொத்தமாக எடுத்துச் செய்தார்களாம். இதன் மூலம், துறை சார்ந்து வசூலிக்கப்பட்ட ‘மேலதிக’ வருமானங்களில் ஒருபகுதியை தந்திரமாக ஒயிட் ஆக்கி இருக்கிறார்களாம்.

நாளைக்கே, “அய்யாவுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு வளம்?” என்று கேட்க வேண்டியவர்கள் கேட்டால், “இந்தா இருக்கு பாருங்க கணக்கு” என்று எடுத்துப் போட்டு சமாளிக்கும் அளவுக்கு ரசீது புத்தகங்களையும் பக்காவாக வைத்திருக்கிறார்களாம். ஆனால், கீர்த்தி மிகுந்தவரின் வளர்ச்சியைப் பிடிக்காத உட்கட்சி எதிரிகள் இதையெல்லாம் ஆராய்ச்சி கட்டுரை கணக்காய் எழுதி, அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்பி இருக்கிறார்களாம்.

SCROLL FOR NEXT