‘பழக்’ கட்சி அப்பாவும், பிள்ளையும் மீண்டும் ஒன்றானதில் கட்சி ‘சொந்தங்கள்’ தரப்பில் பலரும் நிம்மதியாய் இருக்கிறார்கள். தேர்தலுக்கு முன்பே இது நடந்திருக்கலாம் என அவர்களில் பலரும் ஆதங்கப்பட்டு வரும் நிலையில், தம்பியும், அப்பாவும் மீண்டும் கைகுலுக்கியதில் ‘மதி’ மகளுக்கு இன்னமும் ஆதங்கம் தீரவில்லையாம்.
“சும்மா இருந்த என்னை அரசியலுக்குள் இழுத்து வந்து, இப்போது தேரை இழுத்து தெருவில் விட்ட கதையாக முட்டுச் சந்தில் நிறுத்திவிட்டார்கள்” என்று புலம்புகிறாராம். அதனால், தோட்டத்து வீட்டுக்கு தம்பி வந்து போன பிறகு, அப்பாவிடம் போனில்கூட பேச மறுத்து தனது ‘வனம்’ வீட்டிலேயே இருந்து வருகிறாராம்.
இதற்கிடையே, அப்பா - மகன் அதிகாரப் போராட்டத்தில் அநியாயத்துக்கு பாதிக்கப்பட்ட மாம்பழத்து ஊரின் ‘அருள் பெற்றவருக்கு’ ஆளும் தரப்பில் இருந்து இன்வைட் வந்ததாம். ஆனால், தனிக்காட்டு ராஜாவாய் இருந்து பழகிவிட்ட அவருக்கு, அந்த பக்கம் போய் கூட்டத்தோடு கூட்டமாய் கும்மியடிக்க விருப்பம் இல்லையாம்.
அதேசமயம், ‘பழக்’ கட்சி பெரியவர் இத்தனை நாளும் தன்பக்கம் நின்றவர்களை கலந்து பேசாமல், அவர்களைப் பற்றி எல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் மகனைக் கட்டித் தழுவி கண்ணீர் உகுத்ததில் அவருக்கு சொல்லமுடியாத அளவுக்கு ‘லிட்டில்’ வருத்தமாம். அதனால் ‘பழக்’ கட்சியின் இன்னொரு பிரிவாக தனது தலைமையில் ஓர் அணியைத் திரட்டி செயல்படும் திட்டத்தில் இருக்கிறாராம். இவருக்குப் பின்புலத்தில் ‘மணியான’ தலைவரும், ‘மதியான’ மகளும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.