‘அவார்டு’ நகர் மாவட்டத்தில் ‘முதன்மையானவர்’ பிறந்த நாளை அந்த மாவட்டத்தின் இரண்டு மாண்புமிகுக்களும் அடுத்தடுத்த நாளில் தனித்தனியாகக் கொண்டாடி ’மிரட்டி’ இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் திடீர் வரவாக உதித்த மாண்புமிகு ‘கீர்த்தனை’ புள்ளிக்கும் ‘மாரியான’ மாவட்ட செயல் புள்ளிக்கும் ஆரம்பத்திலிருந்தே சரிப்பட்டு வரவில்லை.
இதனால் ஒருவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மற்றவர் மறந்தும் தலைக்காட்டாமல் இருந்து வருகிறார்கள். அதேசமயம், இந்த மாவட்டத்தின் இன்னொரு மாண்புமிகுவான ‘ஜெகத்’ புள்ளியானவர் ‘மாரியானவர்’ பக்கம் நிற்பதால் இரண்டு மாண்புமிகு மக்களும் கீரியும் பாம்புமாய் நிற்கிறார்கள்.
இந்த நிலையில் ‘பட்டாசு’ நகரில், ‘முதன்மையானவர்’ பிறந்த நாளுக்காக ‘மாரியானவரை’ வைத்து ரத்ததான முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தினாராம் ’ஜெகத்’ புள்ளி. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “பலரும் எனக்கு எவ்வளவோ நெருக்கடி கொடுக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே ‘மாரியானவர்’ தான் நமது இயக்கத்துக்காக உழைப்பவர்.
ஆகவே, நாமெல்லாம் அவர் பின்னால் தான் நிற்க வேண்டும்” என்று பேசினாராம். இதற்கு மறுநாளே, ‘பட்டாசு’ நகரில் ‘மாரியானவர்’ அலுவலகத்தின் கீழேயே ‘முதன்மையானவர்’ பிறந்த நாள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார் மாண்புமிகு ‘கீர்த்தனம்’. சோஷியல் மீடியா மக்களை கவுரவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியின் போது, அருகில் வைக்கப்பட்டிருந்த ‘ஜெகத்’ மாண்புமிகுவின் ஃப்ளெக்ஸ் போர்டை துவம்சம் செய்த ‘சம்பவமும்’ நடந்திருக்கிறது.
அதேநாளில், ‘கோட்டை’ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ‘ஜெகத்’ அம்மையார், “திமுக-காரங்கள வெச்சு எல்லாம் என்னைய மிரட்டிப் பாக்குறாங்க” என்று மீண்டும் பகிரங்கமாகப் புலம்பினார். இந்த நிலையில் தான், நேற்று ‘அவார்டு’ நகரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிக்கான பேனரில் மாவட்டத்தின் பொறுப்பு மாண்புமிகுவான தனது பெயரை முதலில் போடாமல் கீர்த்தனத்தின் பெயரை முதலில் போட்டது ஏன் என அதிகாரிகளை பொதுவெளியிலேயே சுண்டினார் மாண்புமிகு ‘ஜெகத்’.
இப்படி ஒரே மாவட்டத்தில் இரண்டு மாண்புமிகுக்களும் ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ யுத்தம் நடத்திக் கொண்டிருப்பதால் மாவட்டத்தின் மற்ற எம்எல்ஏ-க்களும் அதிகாரிகளும் யார் பக்கம் கொடிபிடிப்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.