தமிழகம்

‘குறிச்சி’ மாவட்ட ‘புரம்’ தொகுதி இலைக் கட்சி பஞ்சாயத்து | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘குறிச்சி’ மாவட்டத்தின் ‘புரம்’ தொகுதியின் ‘ராகமான’ இலைக்கட்சி எம்எல்ஏ-வானவர், தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக அண்மையில் சொந்தக் கட்சி மாவட்டச் செயலாளர் மீதே குற்றச்சாட்டுகளை அடுக்கி இருந்தார். இதன் பின்னணியை விசாரித்தால் புதுக் கதை சொல்கிறார்கள். தேர்தல் சமயத்தில் மா.செ தரப்பில் ‘ராகமானவருக்கு’ 3 ‘சி’ பணத்தை கடனாக திரட்டிக் கொடுத்தார்களாம்.

இந்த நிலையில், இலைக் கட்சியில் 25 எம்எல்ஏ-க்கள் தனியாக ‘புரட்சி செய்ய’ புறப்பட்டபோது அதில் ஒருவராய் ‘ராகமானவரும்’ இருந்தார். இதனால் கடுப்பான மா.செ தரப்பு, தேர்தலுக்காக கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு ‘ராகமானவருக்கு’ டார்ச்சர் கொடுத்ததாம். அதற்கு, “இப்பெல்லாம் என்னால தரமுடியாது” என பஞ்சப்பாட்டு பாடினாராம் ‘ராகமானவர்’.

ஆனால், “இப்பத்தான் ‘லம்பா’ வந்துருக்கும்ல... அதுல கொஞ்சத்த எடுத்து விடுறது” என்று கிடுக்குப் பிடி போட்டதாம் மா.செ தரப்பு. இதைத்தான் தன்னை பணி செய்யவிடாமல் தடுப்பதாக செய்தி வாசித்தாராம் ‘ராகமானவர்’. இந்த நிலையில், இந்த இம்சையில் இருந்து தப்பிக்க, அண்மையில் தனது எம்எல்ஏ அலுவலகத்தை இலைக் கட்சியின் முன்னாள் மாண்புமிகுவான ‘முகம்’ தலைவர் கையால் திறக்க வைத்திருக்கிறார் ‘ராகமானவர்’.

இதன் மூலம், ‘என்னை நெருக்குனா எனக்காக மிஸ்டர் ‘முகம்’ வருவாரு’ என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார். இந்த பஞ்சாயத்துக்கு நடுவில், திறப்பு விழாவுக்கு வந்த ‘முகம்’ தலைவர், அந்த அலுவலகத்தில் இருந்த எடக்கானவர் படத்தை உடனே அப்புறப்படுத்தச் சொன்னாராம். மறுத்துப் பேசாமல் எடக்கானவர் படத்தை அப்போதே அங்கிருந்து அகற்றிவிட்டாராம் ‘ராகமானவர்’. இப்போது இதுகுறித்தும் கட்சி தலைமைக்கு ‘பிட்’டுப் போட்டிருக்கிறதாம் மா.செ தரப்பு.

SCROLL FOR NEXT