‘மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள ‘மேடான’ தொகுதியில் 2021 தேர்தலில் சூரியக் கட்சியின் ‘சுந்தரமான’ வேட்பாளர் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். தனக்கு சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த ‘கல்யாண’ ஒன்றியச் செயலாளரின் ஆதரவாளர்களே தனது தோல்விக்குக் காரணம் என அப்போது தலைமைக்கு தகவல் சொன்னார் ‘சுந்தரமானவர்’.
அதேசமயம் பார்டரில் ஃபெயிலானதால் இம்முறையும் தலைமை தனக்கே சீட்டை ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக தொகுதிக்குள் சொந்தக் காசை செலவு செய்து மக்களை ‘கவனித்து’ வந்தார். ஆனால் மாற்றி யோசித்த தலைமையோ, ‘சுந்தரமானவருக்கு’ பதிலாக ‘கல்யாணமானவரின்’ துணைவியாரை அங்கு நிறுத்தியது. இதனால் வெகுண்டெழுந்த திருவாளர் ‘சுந்தரம்’, கட்சிப் பதவியை கடாசிவிட்டு சுயேச்சையாகவே களமிறங்கினார்.
தேர்தலில் அவருக்கு 27 ஆயிரம் வாக்குகளை வாரிவழங்கிய மக்கள், சுமார் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ‘கல்யாணமானவரின்’ துணைவியாரை தோற்கடித்துவிட்டார்கள். தனது சொந்த வாக்குச் சாவடியிலேயே அவரால் சோபிக்க முடியவில்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எங்கே தவறு நடந்தது என விசாரணை நடத்தியதாம் சூரியக் கட்சி வட்டாரம்.
அப்போது, ‘‘சுந்தரமானவர்’ சுத்துப்போட்டு வேலை செய்ததுதான் தோல்விக்குக் காரணம்” என்று சொன்ன ‘கல்யாணமானவர்’ தரப்பு, வாக்காளர் ‘கவனிப்புக்காக’ தலைக்கு 2 ஆயிரம் வீதம் கொடுத்த பணத்தை எல்லாம் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களிடம் முறைப்படி தந்துவிட்டதாகச் சொன்னதுடன், பணம் பெற்றுக் கொண்டு பொறுப்பாளர்கள் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஆவணத்தையும் சமர்ப்பித்ததாம்.
இந்த நிலையில், எப்படியோ இந்த ஆவணத்தைக் கைப்பற்றிய விசில் பார்ட்டி வில்லாதி வில்லர்கள், “சூரியக் கட்சி இப்படி லட்சம் லட்சமாய் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததையும் மீறி மக்கள் எங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள் பார்த்தீர்களா” என்று இப்போது சமூக வலைதளத்தில் வாள்வீசி வருகிறார்கள்.