‘மலர்ச்சி’ கட்சி மக்கள் பிரதிநிதிகள் இருவரையும் ராஜினாமா செய்ய வைக்க அழுத்தம் தரப்படுகிறதாம். ஆனால், “ராஜினாமா செய்துவிட்டு தனி சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் மறுபடி நமக்கு ஓட்டுப் போடுவார்கள் என்பது என்ன நிச்சயம். அதுவுமில்லாமல் பொதுத் தேர்தலில் செலவழித்த 20 ‘சி’யை இப்போது யார் நமக்குக் கொடுப்பார்கள்?” என்றெல்லாம் அந்த இருவரும் நியாயக் கேள்வி எழுப்புகிறார்களாம்.
இருப்பினும் அவர்களை தங்கள் இழுவைக்குக் கொண்டுவர தொடர்ந்து அழுத்தம் கொடுக்கிறார்களாம். இந்த நெருக்கடியால், வாக்களித்த மக்களுக்கு நன்றி செல்லக்கூட போகமுடியாமல் தர்மசங்கடத்தில் இருக்கிறார்களாம் இரண்டு மக்கள் பிரதிநிதிகளும்.
இதனிடையே ‘சிறுத்தை’ கட்சியை தொடர்ந்து ‘மலர்ச்சி’ கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் சிலரை முதல்கட்டமாக இந்த வாரத்தில் அறிவாலயக் கட்சி அரவணைத்துக் கொள்ளும் என்கிறார்கள். இந்தப் பட்டியலில், ‘கழகத்தை’ தன் பெயரோடு சேர்த்து வைத்திருக்கும் தலைநகர் தளபதி ஒருவரும், ‘மலர்ச்சி’ கட்சி உதயமானபோது அதன் கொடியை ஏற்றியதற்காக ‘குன்று’ இருக்கும் ஊரில் கல்லடிபட்டு கண்பார்வையை பறிகொடுத்த சேரனின் பெயர் கொண்டவரும் பிரதானமாக இருக்கிறார்களாம்.