

‘ஜெயில்’ மாவட்டத்தில் மொத்தம் உள்ள ஐந்து தொகுதிகளில் நான்கை கைப்பற்றியது ஹீரோ பார்ட்டி. ‘டேம்’ தொகுதியில் போட்டியிட்ட அந்தக் கட்சியின் கந்தனின் பெயர் கொண்ட மாவட்டச் செயலாளர் தோற்றுப் போனார். ஆனால், தோற்றாலும் அண்ணன் அதிகாரத்தில் தூள்கிளப்புகிறாராம். தலைக்கு மொட்டை போட்டுக் கொண்டு ஒயிட் அண்ட் ஒயிட் சகிதம் ஆங்காங்கே ஆய்வுக்குப் போகும் திருவாளர் ‘கந்தன்’, “எம்எல்ஏ-க்கள் எல்லாம் அவங்க அவங்க தொகுதிக்குத்தான் கிங். நான் இந்த மாவட்டத்துக்கே கிங்.
நான் இருக்கேன்னு சொன்னதால தான் இந்த மாவட்டத்துக்கு வேற யாரையும் ‘மாண்புமிகுவா’ போடாம வெச்சிருக்கு தலைமை. அதனால, எம்எல்ஏ-க்களே ஏதும் கோரிக்கை வெச்சாலும் என்னையக் கேட்டுத்தான் செய்யணும்” என்று அதிகாரிகளை கிறுக்குப் பிடிக்க வைக்கிறாராம். தனது ஆய்வு சமாச்சாரங்களை உடனுக்குடன் வீடியோ ஷூட் எடுத்து இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டு லைக்குகளை எண்ணிப் பார்த்தும் மகிழ்கிறாராம்.
இவரது அலப்பறைகளால் அரண்டு கிடக்கும் எம்எல்ஏ-க்கள், “ஐயா சாமி... இவரைக் கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணி வைங்க. முடிஞ்சா இவர பொறுப்பில் இருந்து மாத்திவிடுங்க. இல்லாட்டா இவரே கட்சி மானத்தை வில்லங்க ‘ஷிப்’புல ஏத்திருவாரு போலிருக்கு” என்று தலைமைக்கு தகவல் சொல்லி இருக்கிறார்களாம்.