பின்னலாடை மாவட்டத்தின் சூரியக் கட்சி எம்எல்ஏ ஒருவரின் ’யோகமான’ மாப்பிள்ளைக்கு போறாத காலமாம். கட்சியின் அதிகார மையமாக இருக்கும் ‘மாப்பிள்ளை சார்’ நடத்தும் ‘தூவல்’ நிறுவனத்தில் இந்த ‘யோக’ மாப்பிள்ளை முக்கியப் பொறுப்பில் இருக்கிறாராம்.
இதை வைத்து இத்தனை நாளும் தனக்கானதை எல்லாம் சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டு வந்த ‘யோக’ மாப்பிள்ளை, பணம் சேர்க்கும் பார்வையை இன்னும் கொஞ்சம் விசாலப்படுத்தி இருக்கிறார். அப்படியாக, அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி பல பேரிடம் ‘பெரிய நோட்டில்’ 31 நோட் வரைக்கும் தேட்டம் போட்டு விட்டாராம் இந்த யோக்ஸ்.
ஒரு கட்டத்தில், பணம் கொடுத்தவர்களுக்கு காரியம் ஆகாததால் பணத்தைக் கேட்டு நெருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தை எப்படியோ மோப்பம் பிடித்த எம்எல்ஏ-வுக்கு ஆகாத ‘வணக்கத்துக்குரியவரின்’ வாள் தூக்கிகள் விஷயத்தை தலைமை வரைக்கும் தட்டிவிட்டிருக்கிறார்கள்.
இதைக் கேட்டு கொந்தளித்துப் போன ’மாப்பிள்ளை சார்’, இந்த விவகாரத்தை ரகசியமாக விசாரித்து முடித்து உரியவர்களுக்கு உரிய செட்டில்மென்ட்டுகளை செய்துவிடும் பொறுப்பை காவல் துறையின் ‘மழை’ பகவான் அதிகாரியிடம் ஒப்படைத்தாராம்.
இதையடுத்து விசாரணையை மேற்கொண்ட அந்த அதிகாரி, தற்போது செட்டில்மென்ட் வேலையில் மும்முரமாய் இருக்கிறாராம்.
இதனிடையே, அந்த எம்எல்ஏ மகனுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. அன்றைய தினத்தில் முதன்மையானவர் கோவை மாவட்டத்தில் இருந்தும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளாமல் ‘ஸ்கிட்’ செய்துவிட்டு அடுத்த மாவட்டத்துக்குப் போய்விட்டாராம்.