

ஆலயக் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டே ஆக்ஷன் ஹீரோ கட்சிக்கும் ஆஸ்தான தூதுவர்களை அனுப்பும் தேசியக் கட்சிக்கு தென்கோடியில் கொஞ்சம் செல்வாக்கு அதிகம். அதனால் தெற்கில் சீட் பிடிக்க அந்தக் கட்சிக்குள் எப்போதுமே ஏகப்பட்ட அடிதடிகள் நடக்கும். அப்படித்தான் இப்போது வெளியில் தெரியாமலேயே ‘உள்குத்து உற்சவங்கள்’ அங்கே உத்வேகம் எடுத்திருக்கின்றன.
தென்கோடியில் ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக மூன்றுமுறை ஜெயித்திருக்கும் ‘இளவரசு’ எம்எல்ஏ இம்முறையும் மீண்டும் தனது ’சல்’ தொகுதியில் ’சல்லோ’வாகும் திட்டத்தில் திடமாக இருக்கிறாராம்.
ஆனால், இம்முறையும் ‘இளவரசு’ வெற்றிபெற்றால் அடுத்த கட்ட அங்கீகாரங்களைப் பெறுவதற்கு தன்னோடு போட்டிக்கு வருவார் என கணக்குப் போடும் ‘யூர்’ தொகுதி சிட்டிங் பார்ட்டியான ‘குமாரப்’ புள்ளி, ‘சல்’ தொகுதியை கேட்டு கட்சியில் மனுப் போட தயாராய் இருக்கும்படி அயல் தேசத்தில் படித்துவிட்டு வந்து இங்கு தொழில் செய்யும் நபர் ஒருவரை கொம்பு சீவுகிறாராம். இவரது பேச்சைக் கேட்டு அந்தப் புள்ளியும், “அதென்னங்க... அவரே தான் நிக்கனுமா... நாங்களும் அவங்க ஆளுங்க தானே” என்று நியாயம் கேட்கிறாராம்.
இதை எப்படியோ ஸ்மெல் செய்துவிட்ட ‘இளவரசு’, இம்முறை தனக்கு தொகுதி இல்லை என்றால் இங்கே யாரையும் ஜெயிக்க விடக்கூடாது என்ற திட்டத்துடன் அவரும் தன் பங்கிற்கு ‘உள்குத்து’ உய்யலாலாவைத் தொடங்கி இருக்கிறாராம்.
அதற்காக, இந்தத் தொகுதியில் முன்பு இலைக் கட்சிக்காக போட்டியிட்டு மந்திரி சபை வரைக்கும் போன ‘மால்’ தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் ‘இளவரசு’, “தொகுதி எனக்கில்லை என்றால் உங்களைச் ஜெயிக்க வைக்கிறேன் பாஸ்... நீங்க உங்க கட்சியில எப்படியாச்சும் சீட்டை வாங்கிருங்க” என்று சீக்ரெட்டாக பேசிவைத் திருக்கிறாராம்.