“என் மீதே தவறு இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்” என்று சொல்லி இருக்கிறார் சூரியக் கட்சியின் தலைவர். தோல்விக்கான காரணத்தை களத்தில் இருந்து தெரிந்து கொள்வதற்காக கள ஆய்வுக் குழுக்களையும் அனைத்துத் தொகுதிகளுக்கும் அனுப்பி இருக்கிறார். ஆனால் பட்டும் திருந்தாத திமுக நிர்வாகிகள், பல தொகுதிகளில் ஒட்டுமொத்த நிர்வாகிகளையும் ஒரே இடத்தில் கூட்டி உட்காரவைத்து சம்பிரதாயத்துக்காக கருத்துக் கேட்கிறார்களாம்.
சம்பந்தப்பட்ட நிர்வாகிகளை மேடையில் வைத்துக் கொண்டே கருத்துக் கேட்பதால் உள்ளக் குமுறலைக் கொட்ட முடியாமல் தவிக்கிறார்களாம் தொண்டர்கள். ‘கடல்’ மாவட்டத்தின் ‘பாடி’ தொகுதியின் கள ஆய்வுக்கு வந்த ‘மியூசிக்’ பிரமுகர் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் ‘வள்ளலார்’ ஊரில் இருக்கும் ’அரசி’ திருமண மண்டபத்துக்கு வரவைத்து கூட்டத்தோடு கூட்டமாய் கருத்துக் கேட்டாராம்.
முக்கியமாக வந்திருக்க வேண்டிய ஒன்றியப் புள்ளியே இந்தக் கூட்டத்துக்கு வராமல் புறக்கணித்து விட்டாராம். இதனால், உண்மையான காரணத்தை விட்டுவிட்டு, தூர் வாரியதில் குழப்பம், காண்ட்ராக்ட் கொடுத்ததில் சிக்கல் என உப்புச் சப்பில்லாத காரணங்களைச் சொல்லிவிட்டு கலைந்தார்களாம் உடன்பிறப்புகள்.