தமிழகம்

விசில் அரசில் ‘சக்கரவர்த்தி’க்கு ஜாக்பாட்? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

விசில் கட்சியையும் விடுதலைக்காக போராடிய கட்சியையும் கூட்டு சேர்த்து வைக்க தேர்தலுக்கு முன்பே ரொம்பவே மெனக்கிட்டார் அந்த ‘சக்கரவர்த்தி’. இதற்காக விடுதலைக் கட்சியின் ‘இளம் தலைவர்’ ஆசியுடன் விசில் தலைவரை தனியே சந்தித்தும் பேசினார் ‘சக்கரவர்த்தி’.

இதனையடுத்த நகர்வுகளில் விசில் தலைவருக்கு ரொம்பவே நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மாறிவிட்டாராம் ‘சக்கரவர்த்தி’. தேர்தலுக்குப் பிறகு விடுதலைக் கட்சியை முதல் ஆளாக விசில் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வைத்ததிலும் ‘சக்கரவர்த்தியின்’ முழு சப்போர்ட் இருக்கிறதாம். இதையடுத்து, சொந்தக் கட்சியினரோடு சேர்ந்து விசில் கட்சியினரும் இப்போது ‘சக்கரவர்த்திக்கு’ சபாஷ் போட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், விசில் அரசாங்கத்தில் நிதித்துறையை கவனிக்க நிதி ஆளுமை மேஜிக் தெரிந்த ‘அறிவுஜீவி’ ஒருவரை தேடுகிறார்களாம். தற்போது பதவியேற்றுள்ள மாண்புமிகுக்களில் திருப்பதி கடவுளின் பெயர் கொண்டவரும் ‘ராஜப்புள்ளி’யின் பெயரும் அதற்கான பரிசீலனையில் இருந்தாலும் ஐஐடி மாணவரான ‘சக்கரவர்த்தியையும்’ ஒரு சாய்ஸாக வைத்திருக்கிறாராம் விசில் தலைவர்.

மலைக்கோட்டை கிழக்கு இடைத் தேர்தலில் ‘சக்கரவர்த்தியை’ நிறுத்தி ஜெயிக்க வைத்து அவரிடம் நிதிப் பொறுப்பை ஒப்படைத்துவிடலாமா என நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினாராம் விசில் தலைவர். இதனால், தங்களுக்கு வரவேண்டிய ஒரு எம்எல்ஏ விடுதலைக் கட்சிக்கு போய்விடுமே என எதிர்கருத்து வந்ததாம்.

இருந்த போதும் ‘சக்கரவர்த்தி’ சாய்ஸை இன்னும் கைவிடவில்லையாம் தலைவர். இந்த நிலையில் தான், “தமிழக அரசின் ஒவ்வொரு 100 ரூபாய் வருவாயிலும் 20 ரூபாய்க்கு மேல் கடனுக்கான வட்டிக்காக செலவாகிறது. இது மற்ற பெரிய மாநிலங்களை விட அதிகம். வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என கட்டாய செலவினங்களுக்கே 40 ரூபாய் போய்விடுவதால் கஜானா காலியாக இருக்கிறது” என்று கரிசனமான கருத்து ஒன்றை பதிவிட்டிருக்கிறார் ‘சக்கரவர்த்தி’.

அதேநேரத்தில், விசில் கட்சியின் இன்னொரு தரப்பிலோ, “அதிமுக ‘முகத்தால்’ காலியாகி இருக்கும் ராஜ்யசபா பதவிக்காக ‘சக்கரவர்த்தியை’ நிறுத்தி ஆதரித்து அவரை டெல்லிக்கு அனுப்பும் திட்டமும் இருக்கு” என்றும் சொல்கிறார்கள்.

SCROLL FOR NEXT