

புதுடெல்லி: வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 22.80 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதுதொடர்பாக என்டிஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவிலான தேர்வுகளை நேர்மையாகவும், நம்பகத்தன்மையுடனும் நடத்த என்டிஏ உறுதி பூண்டிருக்கிறது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான புகார்களை விசாரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டோம். அந்த அமைப்புகள் விசாரணை நடத்தி என்டிஏவிடம் விரிவான அறிக்கையை சமர்ப்பித்தன. அதன் அடிப்படையில் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
நீட் மறுதேர்வுக்குப் புதிதாக ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்வுக் கட்டணமும் செலுத்த வேண்டாம். ஏற்கெனவே செலுத்திய தேர்வுக் கட்டணம் திரும்ப வழங்கப்படும். என்டிஏ-வின் சொந்த நிதியில் மறுதேர்வு நடத்தப்படும். மாணவ, மாணவிகள் ஏற்கெனவே எழுதிய தேர்வு மையங்களில் மறுதேர்வு நடத்தப்படும். மறுதேர்வுக்கான தேதி, ஹால் டிக்கெட் குறித்து என்டிஏ சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.
மேலும் விவரங்களுக்கு neet-ug@nta.ac.in இ-மெயில் முகவரி மற்றும் 011-40759000 / 011-69227700 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு என்டிஏ தெரிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமை தலைவர் சுபோத் குமார் சிங் கூறும்போது, “மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தைப் பாழாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் அகற்றப்படுவார்கள். வலுவான பாதுகாப்பு நடைமுறைகளோடு நீட் மறுதேர்வு நடத்தப்படும். இதுதொடர்பாக விரைவில் விரிவான வழிகாட்டு நெறிகள் வெளியிடப்படும். இதன்மூலம் எதிர்காலத்தில் தவறுகள் நடைபெறுவது தடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
நீட் மறுதேர்வு குறித்து என்டிஏ வட்டாரங்கள் கூறும்போது, “வினாத்தாள் கசிவு காரணமாகவே நீட் மறுதேர்வு நடத்தப்பட உள்ளது. பாடத்திட்டம், வினாத்தாள், தேர்வு நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது. மே மாத இறுதி அல்லது ஜூன் மாதத்தில் மறுதேர்வு நடத்தப்படக் கூடும்" என்று தெரிவித்தன.
ரூ.100 கோடி வரை… நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளது. இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
நீட் தேர்வுக்கான வினாத்தாளை அச்சடித்த அச்சகம் அல்லது வாகனங்களில் வினாத்தாள் கொண்டு செல்லப்பட்ட போது வினாத்தாள் கசிந்திருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறோம். முதல் வினாத்தாளை வழங்கிய அச்சக ஊழியருக்கு ரூ.10 கோடி வரை வழங்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
வினாத்தாள் சில இடங்களில் ரூ.28 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
இந்த வழக்கில் இதுவரை கைதானவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்லூரி மாணவர்கள். கேரளாவில் மருத்துவக் கல்லூரி மாணவர் பிடிபட்டு உள்ளார். இதே வழக்கில் மகாராஷ்டிராவின் நாசிக்கில் சுபம் காரினார் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, உத்தராகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களின் போலீஸாரிடம் இருந்து ஆதாரங்களைப் பெற்று முழுமையான விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைக் கண்டித்து பல்வேறு மாணவர் சங்கங்கள் சார்பில் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
டெல்லி மட்டுமன்றி பாட்னா, கோட்டா, சிகார், டேராடூன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்கள் நடத்தப்பட்டன.