தமிழகம்

இலைக் கட்சி ‘மதுரை மன்னரை’ வீழ்த்த நூதன உத்தி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘ரகசியத்துக்கு’ பேர் போன தொகுதியில் இலைக் கட்சி சார்பில் களத்தில் நிற்கும் ‘மதுரை மன்னரை’ வீழ்த்த இம்முறை நூதன உத்தியைக் கையாண்டிருக்கிறது சூரியக் கூட்டணி. தொடர்ந்து இரண்டு முறை வென்று மூன்றாவது முறையாக களத்தில் நிற்கும் ‘மன்னர்’, கடந்த 5 ஆண்டுகளில் மக்களை கவனித்துக் கொண்ட அளவு கட்சிக்காரர்களை சந்தோசமாக வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டாராம்.

இதனால், சொந்தக் கட்சிக்குள் நிறையப் பேர் அவருக்கு எதிராக சூனியக் கயிறுடன் சுற்றிக் கொண்டிருந்தார் களாம். சூரியக் கட்சி இம்முறை இந்தத் தொகுதியை ‘டெமாக்ரெட்டிக்’ கட்சிக்கு ஒதுக்கிவிட்டாலும் சூரியன் தான் களத்தில் நிற்கிறது.

இருப்பினும் அதிமுக ஓட்டுகளை ‘மன்னருக்கு’ போகவிடாமல் தடுக்க திட்டமிட்ட சூரியக் கூட்டணி, ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் இலைக்குப் போகும் ஓட்டுகளில் தலா 30 ஓட்டுகளை வேறு பக்கம் திருப்பிவிட அதிமுக அதிருப்தியாளர்களிடம் ‘பேச்சுவார்த்தை’ நடத்தியதாம். இதற்காக ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் 60 ஆயிரத்தை ஒதுக்கியதாம் சூரியக் கூட்டணி. இதில்லாமல் ஒவ்வொரு கிராமத்திலும் தீவிர களப்பணி ஏதும் செய்யாமல் இருக்க இலைக் கட்சி முக்கிய நிர்வாகியின் கையில் தலா ஒரு லகரத்தை தனியாக திணித்தார்களாம்.

பணம் கொடுக்கப்பட்ட அந்த 30 ஓட்டுகளும் சூரியனுக்குப் போடத் தேவையில்லை. ஆனால், இலையின் தலையில் விழக்கூடாது என்பதே ஒப்பந்தமாம். இதன் மூலம் அந்தத் தொகுதியில் உள்ள 290 பூத்களில் சுமார் 8 ஆயிரம் ஓட்டுகளை இலைக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டதாக சூரியக் கூட்டணி இப்போது வெளியில் சொல்ல ஆரம்பித்திருக்கிறது.

இதனால் தேர்தலுக்கு முன்பு, “15 ஆயிரம் ஓட்டில் ஜெயிப்போம்” என சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்த இலைக்கட்சி ‘மன்னர்’ இப்போது, ‘‘சொற்ப ஓட்டுலயாச்சும் ஜெயிச்சிருவோம்ணே” என்று நட்பு வட்டத்தில் சன்னமாகப் பேச ஆரம்பித்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT