தமிழகம்

‘கரூர் கம்பெனி வெங்கடாசலபதி’ செய்கை | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

"இம்முறை கழகத்தின் வெற்றிக் கணக்கு மேற்கு மண்டலத்திலிருந்தே தொடங்கும்” என்று பெருத்த நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார் ‘சூரியக் கட்சி’ தலைவர். அவருக்கு அந்த நம்பிக்கையைத் தந்திருப்பவர் ‘கரூர் கம்பெனி வெங்கடாசலபதி’ தானாம்.

தலைவரிடம் நற்பெயர் எடுக்க ’கம்பெனி’ தலைவரும் தனது மண்டலத்தில் தூக்கத்தை மறந்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி இருந்தும், ‘இவரு வந்து தான் தூக்கி நிறுத்தப் போறாராக்கும்’ என்ற மனநிலையில் பல மாவட்டங்களில் முக்கிய நிர்வாகிகள் சிலர் ’கம்பெனி’ தலைவரை உதாசீனம் செய்கிறார்களாம்.

இவர்களை எல்லாம் சீனியர் மாண்புமிகுக்குள் சிலர் தட்டிக் கொடுத்து வளர்க்கிறார்களாம். இது தெரிந்து, தனக்கு எதிராக உதார்விடும் நபர்கள் குறித்து தகவல் கொடுக்க மாவட்ட வாரியாக ‘சிஐடி’க்களை போட்டு வைத்திருக்கிறாராம் ‘கம்பெனி’ தலைவர்.

இந்த நிலையில், லாரி மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக கழகத்தின் மாவட்டச் செயற்குழு கூடியதாம்.

அப்போது ‘கம்பெனி’ தலைவர் சொன்னதாக சில தகவல்களை நிர்வாகிகள் சிலர் பேச, அவர்களை அடக்கி உட்காரவைத்த ‘ராஜ’மான மாவட்ட முதன்மைப் புள்ளி, “மண்டலப் பொறுப்பாளராவது கிண்டலப் பொறுப்பாளராவது... தலைமை என்ன சொல்லுதோ அதைத்தான் நான் கேட்பேன்” என்று ’கம்பீரமாய்’ கர்ஜித்தாராம்.

இந்தத் தகவலை உடனடியாக ‘கம்பெனி’ தலைவரின் காதுக்குக் கொண்டுபோய் விட்டார்களாம் ‘சிஐடி’ பார்ட்டிகள். இதுகுறித்தும் இதன் பின்னால் இருந்து ஊக்குவிக்கும் இரண்டெழுத்து ‘ஆயுத’ மாண்புமிகு குறித்தும் தலைமைக்கு நோட் போட்டிருக்கிறாராம் ‘கம்பெனி’ தலைவர்.

SCROLL FOR NEXT