தூங்கா நகரின் மைய தொகுதியில் களத்தில் நிற்கும் கணவரை ஜெயிக்க வைக்க மலர் கட்சி நடிகை ரொம்பவே மெனக்கிட்டாராம். ஆனால், இந்தத் தம்பதியால் கரன்சி மழை கொட்டும் என எதிர்பார்த்து ஏமாந்துபோன அங்குள்ள இலைக் கட்சி நிர்வாகிகள் கடைசி 3 நாட்கள் ரொம்பவே சண்டித்தனம் செய்துவிட்டார்களாம்.
பணம் கேட்டு பலவாறாக அவர்கள் துரத்தவும், “எதிர்த்து நிற்கும் சூரியக் கட்சி மாண்புமிகு, ஓட்டுக்கு பணமே கொடுக்காமல் வேலை பார்க்கும் போது நீங்கள் ஏன் இப்படி நெருக்கடி கொடுக்கிறீர்கள்?” என்று சூடாகிவிட்டாராம் நடிகை. அதற்கு இலைக் கட்சி நிர்வாகிகள், “ஓட்டுக்கு காசு கொடுக்காட்டியும் கட்சிக்காக கொடி பிடிச்சு வர்றவனுக்கு ஏதாச்சும் குடுக்க வேண்டாமா?” என உரிமை நாதம் எழுப்பினார்களாம்.
இதையடுத்து எடக்கானவருக்கே போன் போட்டு புலம்பிய நடிகை, “முடிஞ்ச வரைக்கும் செலவு பண்ணிட்டோம். ஆனா, உங்காளுங்க இன்னும் பணம் பணம்னு நச்சரிக்கிறாங்க. கொஞ்சம் அவங்ககிட்ட பேசுங்க சார்” என்றாராம். “இது விஷயமாக மாவட்டச் செயலாளரிடம் பேசுகிறேன்” என்று சொல்லி அப்போதைக்கு பிரச்சினையை முடித்திருக்கிறார் எடக்கானவர்.
ஆனால், அதன் பிறகும் பணப் பஞ்சாயத்து ஓயாததால் வாக்குப்பதிவு நாளில் பூத்களில் சரியானபடிக்கு ஆட்களை உட்காரவைக்கக்கூட முடியாமல் தடுமாறிப் போனதாம் தம்பதி. ஒருவேளை, தேர்தல் முடிவுகள் ஏடாகூடமாக வந்தால், இலைக் கட்சியினரிடம் தங்களுக்கு ஏற்பட்ட ‘சிறப்பான’ அனுபவத்தை மீடியாக்கள் முன்னிலையில் நடிகை பஞ்சாயத்துக் கூட்டி பகிரங்கப்படுத்தினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.